ADDED : ஜூலை 13, 2025 11:32 PM

புதுடில்லி: நம் நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் நம் நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 'ஏடிஸ்' எனப்படும் கொசு கடிப்பதால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில், ஐ.சி.எம்.ஆர்., உதவியுடன், டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'பனேசியா பயோடெக்' என்ற மருந்து நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
'டெங்கி ஆல்' என்ற பெயரில் தடுப்பூசி உருவாகி வருகிறது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நிறைவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, டில்லி, கொல்கட்டா, புவனேஸ்வர், புனே ஆகிய நகரங்களில், 8,000 தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானிகள் நேற்று கூறியதாவது:
டெங்கு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் முடிந்துள்ளன. ஒரு முறை மட்டுமே செலுத்தும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விரைவில் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இதில், நாடு முழுதும் 10,500 பேர் பங்கேற்க உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்வோர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கண்காணிப்பில் இருப்பர்.
வரும் அக்டோபருக்குள் மூன்றாம் கட்ட பரிசோதனை முடியும் என நம்புகிறோம். டெங்கு காய்ச்சலில் நான்கு வகைகள் உள்ளன. அவற்றுக்கு ஏற்றபடி பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.