ஆவணி ராமலிங்கேஸ்வரர் திருவிழா ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு
ஆவணி ராமலிங்கேஸ்வரர் திருவிழா ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு
ADDED : பிப் 22, 2024 11:21 PM
முல்பாகல்,: ''ஆவணி ராமலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் டிஜிட்டல் பேனர்கள், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது,'' என, முல்பாகல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முல்பாகலின் ஆவணி மலை ராமலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை வகித்து முல்பாகல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் பேசியதாவது:
இதிகாச பிரசித்தி பெற்ற ஆவணியில் ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஸ்ரீராமர் வனவாசத்தின்போது, இங்கு தங்கி இருந்ததாக கருதப்படுகிறது. ஆவணி மலையில் தான் 'லவ - குசா' பிறந்த இடம் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில், நாடு முழுதும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
குறிப்பாக குடிநீர் வசதி அவசியம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலா ஐந்து கழிப்பறைகள் அமைக்கப்படும். சுகாதார வசதிகளும் செய்யப்படும்.
முக்கிய அம்சங்களாக கால்நடைகள் விற்பனை, ஏலம் விடுதல், அதன் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள், கூடுதல் பஸ் வசதி செய்து தரப்படும்.
இவ்வாண்டு பிரம்மோற்சவம் மார்ச் 4 முதல் 20 வரை நடத்தப்படும். விழாவை முன்னிட்டு அரசியல்வாதிகளின் பேனர்கள் வைக்க, அனுமதி வழங்கப்பட மாட்டாது. அரசியல் கட்சிகளின் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கிடையாது.
அரசின் தோட்டக் கலைத்துறை, வேளாண்மை துறை, சுகாதார நலத்துறை கண்காட்சி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.