ஞானவாபி வளாகத்துக்கு செல்ல சாமியாருக்கு அனுமதி மறுப்பு
ஞானவாபி வளாகத்துக்கு செல்ல சாமியாருக்கு அனுமதி மறுப்பு
ADDED : ஜன 29, 2024 11:40 PM

லக்னோ: உத்தர பிரதேசத்தில், ஞானவாபி வளாகத்துக்கு செல்ல முயன்ற ஜோதிஷ் மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
உ.பி., மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி வளாகத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர், சமீபத்தில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
அதில், ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த தகவலை, இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த ஹிந்து அமைப்பின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, ஞானவாபி வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், லக்னோவில் உள்ள ஜோதிஷ் மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த், தன் சீடர்களுடன் ஞானவாபி வளாகத்துக்கு செல்ல, நேற்று மடத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார், அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். ஞானவாபி வளாகம் அமைந்துள்ள பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, ஞானவாபி வளாகத்தில், 'வஜுகானா' எனப்படும் தொழுகைக்கு முன், கை கழுவ பயன்படும் தொட்டி அமைந்துள்ள பகுதிக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.