மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்
மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்
UPDATED : ஜூன் 11, 2025 04:29 PM
ADDED : ஜூன் 11, 2025 04:24 PM

புதுடில்லி: விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90 சதவீத மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் இரண்டு முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக்கோரி பிரதமர் மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக அவர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தலித், எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
பீஹாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதிக்கு சமீபத்தில் சென்ற போது, ஒரு அறையை 6 - 7 மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை பார்த்தேன். சுகாதாரமற்ற கழிப்பறைகள், பாதுகாப்பற்ற குடிநீர், மெஸ், நூலக வசதிகள் இல்லாதது, இணைய வசதி கிடைக்கவில்லை என மாணவர்கள் புகார் அளித்தனர்.
இரண்டாவதாக, விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 10ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தோல்வி அடைந்த திட்டமாக உள்ளது. பீஹாரில், இதற்கான இணையதளம் கடந்த 3 ஆண்டாக செயல்படவில்லை. 2021 -2022 ல் இருந்து மாணவர்களுக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை.
உதவித்தொகை பெறும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. 2022 -23ம் நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1. 36 லட்சம் ஆக இருந்தது. இது 2023 - 24 ம் நிதியாண்டில் 69 ஆயிரமாக குறைந்தது. உதவித்தொகை குறைந்த அளவிலேயே உள்ளதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த பிரச்னைகள் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இதனை சரி செய்ய உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.
தலித்கள், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினர், ஒபிசி பிரிவினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகளை ஆய்வு செய்து நல்ல உள்கட்டமைப்பு, சுகாதாரம், உணவு மற்றும் கல்வி வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய போதுமான அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
10-ம் வகுப்புக்குப் பிறகு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை சரியான நேரத்தில் வழங்கவும், அதனை அதிகரிக்கவும், மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றவும் வேண்டும்.
விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னேறாவிட்டால் இந்தியா முன்னேற முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.