'பாக்கியை செலுத்தாவிட்டால் டிபாசிட் தொகையை முடக்கலாம்'
'பாக்கியை செலுத்தாவிட்டால் டிபாசிட் தொகையை முடக்கலாம்'
ADDED : அக் 21, 2024 12:12 AM
பெங்களூரு : 'ஏலத்தில் வாங்கிய சொத்துக்கு, நிர்ணயித்த நாட்களுக்குள் பாக்கி தொகையை செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் டிபாசிட் தொகையை, வங்கி முடக்கலாம்' என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பெங்களூரின் வில்சன் கார்டனில் உள்ள சொத்தை, அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கியவர்கள், கடனை அடைக்கவில்லை. எனவே வங்கி 2-021ன் நவம்பர் 29ல், 'இ - ஏலம்' விட்டது. உடுப்பியை சேர்ந்த சுப்ரமண்ய ராவ், ரத்னம்மா தம்பதி ஏலத்தில் பங்கேற்று, 13 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கினர்.
இதில் 3.25 கோடி ரூபாய் செலுத்தினர். மிச்சமுள்ள 9.75 கோடி ரூபாயை, 15 நாட்களில் செலுத்த வேண்டியிருந்தது. 2022 ஜனவரி 13ல், பாக்கி தொகையை செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் கோரினர். இதை ஏற்றுக்கொண்ட வங்கி, 2022 பிப்ரவரி 10 வரை கால அவகாசம் அளித்தது.
ஆனால் காலக்கெடு முடிந்தும், தம்பதி பாக்கி பணத்தை செலுத்தாததால், வங்கி அந்த சொத்தை, 11 கோடி ரூபாய்க்கு வேறொருவருக்கு விற்றது. தம்பதியின் டிபாசிட் தொகையை முடக்கியது.
இது குறித்து கேள்வி எழுப்பி, உயர் நீதிமன்றத்தில் தம்பதி மனு தாக்கல் செய்தனர். 'வங்கி விதிமுறைப்படி, மூன்று மாதம் கால அவகாசத்தை விஸ்தரித்திருக்கலாம். ஆனால் வங்கி அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
இது பற்றி கேள்வி எழுப்பியும், வங்கி பதில் அளிக்கவில்லை' என, மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
விசாரணை நடத்திய நீதிபதி, 'மனுதாரர் டிபாசிட் தொகையை திரும்ப பெற தகுதி பெற்றுள்ளார்' என, கூறியது. இதை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வு முன்னிலையில், வங்கி அப்பீல் செய்தது.
மனு குறித்து விசாரித்த நீதிமன்றம், 'டிபாசிட் தொகையை திரும்ப தரும் வேண்டுகோளை ஏற்க முடியாது. வங்கி அதிகாரிகள் ஏமாற்றவில்லை. கால அவகாசத்தை நீட்டித்தும், பாக்கி தொகையை செலுத்தவில்லை. எனவே டிபாசிட் தொகையை வங்கி முடக்கலாம்' என, தீர்ப்பளித்தது.

