காங்., அரசை விமர்சித்த தொழிலதிபர்களை சந்தித்து துணை முதல்வர் திடீர் ஆலோசனை
காங்., அரசை விமர்சித்த தொழிலதிபர்களை சந்தித்து துணை முதல்வர் திடீர் ஆலோசனை
UPDATED : அக் 27, 2025 12:21 AM
ADDED : அக் 26, 2025 11:44 PM

பெங்களூரு: பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் குறித்து பகிரங்கமாக விமர்சித்த பிரபல தொழிலதிபர்களுடன், துணை முதல்வர் சிவகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் சாலை பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் குறித்து பிரபல தொழிலதிபர்கள் கிரண் மஜும்தார் ஷா, மோகன்தாஸ் பை ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
இதற்கு காங்., அரசின் துணை முதல்வர் சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், தொழிலதிபர் மோகன்தாஸ் பை வீட்டில், நேற்று முன் தினம் இரவு பிரபல தொழிலதிபர்களுடன் துணை முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய கமிஷனர் ராமேஸ்வர் ராவ் உட்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பெங்களூரில் உள்ள முக்கிய சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஓ.ஆர்.ஆர்., எனும் வெளிப்புற வட்டச்சாலை, பி.ஆர்.ஆர்., எனும் புற வட்டச்சாலை பராமரிப்பு, வடிகால், போக்குவரத்து நெரிசல், குப்பை உடனுக்குடன் அகற்றுதல் உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதை தீர்ப்பதற்கான செயல் திட்டமும் வகுக்கப்பட்டது. தினமும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் வெளிப்புற சாலையின் விரிவாக்க திட்டத்தை சிவகுமார் வழங்கினார். இதற்காக, 500 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டனர்.
'இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது' என, தொழிலதிபர்கள், சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருடன் பெங்களூரு தொழிலதிபர்கள், அதிகாரிகள்.

