குமாரசாமியின் ஆசை வார்த்தைகள் துணை முதல்வர் சிவகுமார் சந்தேகம்
குமாரசாமியின் ஆசை வார்த்தைகள் துணை முதல்வர் சிவகுமார் சந்தேகம்
ADDED : பிப் 20, 2024 06:35 AM

பெங்களூரு: ''ராஜ்யசபா தேர்தலுக்காக, முன்னாள் முதல்வர் குமாரசாமி, எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறுவதாக, எனக்கு தகவல் வந்துள்ளது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரின், விதான் சவுதாவில் நேற்று அவர் கூறியதாவது:
ராஜ்யசபா தேர்தல் வருவதால், முன்னாள் முதல்வர் குமாரசாமி, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு பேசுகிறார். அவர் யாருக்கு போன் செய்தார், என்ன பேசினார், யாரை மிரட்டினார் என்பது எங்களுக்கு தெரியும்.
குமாரசாமி, யாருக்கு என்னென்ன ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார் என்பது குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் என்னிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பா.ஜ.,வின் தந்திரம் குறித்தும், எங்களுக்கு தெரியும். முதலில் இவர்கள் தங்கள் வீட்டை, சரி செய்து கொள்ளட்டும்.
ராஜ்யசபா தேர்தலில், தேவையின்றி ஐந்தாவது வேட்பாளரை களமிறக்கி உள்ளனர். ஒரு முயற்சியை செய்து பார்க்கலாம் என்பது, அவர்களின் எண்ணம். ராஜ்யசபா தேர்தல் தினத்தன்று, அனைத்தும் தெரியும்.
எதிர்க்கட்சிகளின் திட்டத்துக்கு, பதில் திட்டம் வகுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவளிக்கின்றனர். எங்களுக்கு ஆதரவளிக்கும் மற்றவர்களை பற்றி, இப்போது பேசமாட்டேன்; ஓட்டுப்பதிவுக்கு பின் பேசுவேன்.
தமிழகத்தில் நடிகர் கமல் 'இண்டியா' கூட்டணியில் இணைவதால், கூட்டணிக்கு அனுகூலமாக இருக்கும். எங்களுடன் அவர் கைகோர்ப்பதை, வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.

