காங்., மாநாடு வெற்றிக்கு பாலாபிஷேகம் துணை முதல்வர் சிவகுமார் வழிபாடு
காங்., மாநாடு வெற்றிக்கு பாலாபிஷேகம் துணை முதல்வர் சிவகுமார் வழிபாடு
ADDED : ஜன 20, 2025 07:00 AM

பெலகாவி: பெலகாவியில் ஏற்பாடு செய்யப்படும், 'காந்தி பாரத்' மாநாடு வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ள துணை முதல்வர் சிவகுமார், பிரசித்தி பெற்ற கபிலேஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தார்.
சமீப நாட்களாக கர்நாடக காங்கிரசில், உட்கட்சி பூசல் அதிகரிக்கிறது. முதல்வர் மாற்றம், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம், அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து, அமைச்சர்கள் மனம் போனபடி கருத்து தெரிவித்து, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால் எரிச்சல் அடைந்த தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைச்சர்களை கண்டித்து வாயை மூடிக்கொண்டு இருக்கும்படி கட்டளையிட்டார்.
கட்சியில் நடக்கும் நிலவரங்களால், துணை முதல்வர் சிவகுமார் வருத்தம் அடைந்துள்ளார்.
அமைச்சர்களின் செயலால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக விரக்தியில் உள்ளார். இது குறித்து மேலிடத்திடமும் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே பெலகாவியில், 'காந்தி பாரத்' மாநாடு நடக்கவுள்ளது. பெலகாவியில் 1924ல் நடந்த காங்., மாநாட்டில் தான், மகாத்மா காந்தி காங்., தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் நுாற்றாண்டு நிறைவடைந்துள்ளது. இதை நினைவுகூரும் வகையில், பெலகாவியில் 'காந்தி பாரத்' என்ற பெயரில் மாநாடு நடக்க உள்ளது.
கடந்த 2024 டிசம்பரிலேயே, மாநாடு நடந்திருக்க வேண்டும். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால், மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. நாளை காந்தி பாரத் மாநாடு நடக்கவுள்ளது.
சோனியா, ராகுல், பிரியங்கா உட்பட நாட்டின் பல இடங்களில் இருந்து, காங்., - எம்.பி.,க்கள், முதல்வர்கள், தலைவர்கள் என, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினால், மாநில தலைவரான சிவகுமாருக்கு நற்பெயர் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.
வரும் நாட்களில் முதல்வர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது, சிவகுமாரின் எண்ணமாகும். ஆனால் அமைச்சர்கள் திசைக்கு ஒருவராக நிற்கின்றனர்.
எனவே, காந்தி பாரத் மாநாடு எந்த பிரச்னைகளும் இல்லாமல், வெற்றிகரமாக நடந்து முடிய வேண்டும் என, இறைவனை நாடியுள்ளார். பெலகாவியின் கபிலேஸ்வரா கோவில், 'தென்காசி' என பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவிலுக்கு நேற்று சென்ற சிவகுமார் தரிசனம் செய்தார். சிவலிங்கத்துக்கு 160 லிட்டர் பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
பின் சிவகுமார் அளித்த பேட்டி:
பெலகாவியில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடக்கவுள்ளது. காந்தி பாரத் மாநாடு வெற்றிகரமாக நடக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்து கபிலேஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தேன். சிறப்பு பூஜைகள் நடத்தினேன்.
நான் கடவுள் பக்தன். பூஜை செய்யாமல் வீட்டில் இருந்து, வெளியே வரவே மாட்டேன். சில நாட்களாக என்னால் பூஜை செய்ய முடியவில்லை. எனவே இன்று (நேற்று) கோவிலுக்கு வந்து கபிலேஸ்வரரை தரிசனம் செய்தேன்.
எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். மாநில மக்களுக்கு அமைதி, நிம்மதி கிடைக்க வேண்டும். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும்.
எனவே 160 லிட்டர் பால் அபிஷேகம் செய்து, பக்தியுடன் வேண்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.