விமானத்தில் திடீர் கோளாறு; உயிர் தப்பிய துணை முதல்வர்
விமானத்தில் திடீர் கோளாறு; உயிர் தப்பிய துணை முதல்வர்
ADDED : மார் 25, 2025 07:04 AM
சிம்லா; ஹிமாச்சலில், 30க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதளத்தில் இறங்காமல் அதன் விளம்பில் சென்று நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பயணித்த ஹிமாச்சல பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, டி.ஜி.பி., அதுல் வர்மா உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா விமான நிலையத்திற்கு டில்லியில் இருந்து நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க முடியாததால், அதன் விளிம்பில் சென்று நின்றது.
இந்த விமானத்தில், ஹிமாச்சல பிரதேசத்தின் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, டி.ஜி.பி., அதுல் வர்மா உள்ளிட்ட அனைத்து பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மிகவும் குறுகலான ஓடுபாதை உடைய இந்த விமான நிலையத்தில், விமானங்களை தரையிறக்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
எனினும், இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்,” என்றார்.