துணை கலெக்டர் தற்கொலை; மார்க்சிஸ்ட் பெண் தலைவர் கைது!
துணை கலெக்டர் தற்கொலை; மார்க்சிஸ்ட் பெண் தலைவர் கைது!
ADDED : அக் 29, 2024 08:53 PM

திருவனந்தபுரம்: கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன் பாபு தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தற்கொலைக்கு தூண்டியதாக மார்க்சிஸ்ட் பெண் தலைவர் திவ்யாவை கைது செய்தனர்.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி கேரளாவில் நடக்கிறது. இங்குள்ள கண்ணனூர் மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவராக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகராக திவ்யா பதவி வகிக்கிறார்.
இந்த மாவட்டத்தில் துணை கலெக்டராக பணியாற்றியவர் நவீன் பாபு. இவர், பதவி உயர்வு பெற்று பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு செல்ல இருந்தார்.
இதை முன்னிட்டு கேரள அரசு ஊழியர்கள் சார்பில் நவீன் பாபுவுக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
விழாவில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அந்த விழாவில், எந்த அழைப்பும் இன்றி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யாவும் கலந்து கொண்டார்.
அங்கு பலர் முன்னிலையில், துணை கலெக்டர் நவீன் பாபுவை அவதூறாக பேசினார். அவர் மீது லஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
சக அரசு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த துணை கலெக்டர் நவீன் பாபு, அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரளா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யாவின் அவதூறான குற்றச்சாட்டுகளால் மனம் உடைந்த நேர்மையான அதிகாரி நவீன் பாபு தற்கொலை செய்து கொண்டதாக அரசு ஊழியர்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில் விசாரணை நடத்திய போலீசார், நவீன் பாபுவை தற்கொலைக்கு தூண்டியதாக, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யாவை இன்று (அக்.,29) கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை, மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.