தோப்புக்கரணம் போட்ட துணை கலெக்டர்: பணியின் முதல் நாளிலேயே அதிரடி
தோப்புக்கரணம் போட்ட துணை கலெக்டர்: பணியின் முதல் நாளிலேயே அதிரடி
ADDED : ஜூலை 31, 2025 06:05 AM

ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் துணை கலெக்டராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, முதல் நாளிலேயே அதிரடியான நடவடிக்கை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரிங்கு சிங் ரஹி, நேற்று முன்தினம் ஷாஜஹான்பூர் துணை கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு முன், தன் அலுவலகம் துாய்மையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார்.
அப்போது, பலர் தங்கள் இயற்கை உபாதைகளுக்கு கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர்களை பயன்படுத்தியிருந்தது கண்கூடாக தெரிந்தது.
தவிர, கலெக்டர் அலுவலக குமாஸ்தாவும், துாய்மையை பற்றி கவலைப்படாமல் பொது வெளியில் இருக்கும் அந்த சுற்றுச்சுவரை இயற்கை உபாதைக்காக பயன் படுத்திக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த துணை கலெக்டர் ரிங்கு, உடனடியாக அவரை அருகே அழைத்து தோப்புக்கரணம் போட வைத்தார்.
இது பற்றி அறிந்ததும் கலெக்டர் அலுவலகத்திற்குள் குவிந்த வழக்கறிஞர்கள், தோப்புக்கரணம் போட வைத்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை கலெக்டர் சமாதானம் செய்ய சென்றபோது, 'ஒட்டுமொத்த கலெக்டர் அலுவலக வளாகமும் சுத்தம் இல்லாமல் இருக்கிறது. அதற்கு நீங்கள் பொறுப்பேற்று தோப்புக்கரணம் போடுவீர்களா?' என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த விநாடியே, ரிங்கு சிங், அனைவரது முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட்டு, நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைகளுக்காக மன்னிப்பு கேட்டார்.
துணை கலெக்டரின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத வழக்கறிஞர்கள், உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கலெக்டர் அலுவலகத்தின் துாய்மைக்கு பொறுப்பேற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரிங்கு சிங் தோப்புக்கரணம் போட்ட 'வீடியோ' சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.