ADDED : ஜன 08, 2024 10:55 PM

மைசூரு: கிராம பஞ்சாயத்து அலுவலக, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார். தன் இந்த முடிவுக்கு துணை தாசில்தார் காரணமென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மைசூரு அருகே ஹுல்லஹள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலக, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பரமேஷ், 36. நேற்று முன்தினம் மாலை பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்ற அவர், திடீரென விஷம் குடித்தார். வாயில் நுரைதள்ளிய நிலையில், உயிருக்குப் போராடினார்.
அந்த வழியாக சென்றவர்கள், பரமேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார்.
ஹுல்லஹள்ளி போலீசார், கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்று, சோதனை நடத்தினர். பரமேஷ் எழுதிய மரண கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், 'கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் தெரியவில்லை. துணை தாசில்தார் சிவகுமார், எனக்கு தொல்லை கொடுத்தார். மனரீதியாக என்னை சித்ரவதை செய்தார்.
இதனால் தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு சிவகுமார் தான் நேரடி காரணம்' என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். சிவகுமாரிடம் விசாரணை நடக்கிறது.