சூசை பாளையத்தில் ஆதரவற்றோர் விடுதி மூடல் பஸ் நிலையத்தில் மீண்டும் தஞ்சமாகும் அவலம்
சூசை பாளையத்தில் ஆதரவற்றோர் விடுதி மூடல் பஸ் நிலையத்தில் மீண்டும் தஞ்சமாகும் அவலம்
ADDED : நவ 08, 2024 07:43 AM

தங்கவயல் நகராட்சிக்கு சொந்தமான சமுதாய பவன், ஆண்டர்சன்பேட்டை சூசை பாளையத்தில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டடம், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பலரின் வலியுறுத்தலுக்கு பின், இக்கட்டடத்தை வீடற்ற, ஆதரவற்றோர் தங்குவதற்கு வசதியாக, நகராட்சி காப்பகமாக மாற்றியது.
பூங்காக்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம், தெருக்களில் படுத்து உறங்குவோரை வாகனங்களில் அழைத்து வந்து தங்க வைத்தனர். இதன் மூலம், நகரின் அந்தஸ்து உயரும் நோக்கமாக இருந்தது. இங்கு தங்குவோருக்கு குளியல் அறை, கழிப்பறை கட்டப்பட்டது. தண்ணீர் வசதியும் செய்து தரப்பட்டது. இங்கு தங்குவோரை பராமரிக்கும் பொறுப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இவர்களுக்கு மூன்று வேளை உணவு, படுக்கை, போர்வை வழங்கப்பட்டது. தனித்தனி அறைகளில் 20 பேர் தங்கியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின், தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த கவுரவ நிதி நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அவர்களும் பணிகளை தொடரவில்லை.
இதனால் ஆதரவற்ற, வீடற்ற ஏழைகள் மீண்டும் பஸ் நிலையம், ரயில் நிலையம், பூங்காக்களில் படுத்து உறங்குவதை தொடர்கின்றனர். இதன் மீது நகராட்சி கவனம் செலுத்துமா அல்லது சமுதாய பவன் கட்டடம் பாழடைந்து போகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
***
* நல்ல திட்டம் தொடருமா?
பெருநகரங்களில் பிச்சைக்காரர்கள் மறு வாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். இது போல் தங்கவயல் நகராட்சி, பயன்படுத்தாமல் உள்ள சமுதாய பவன் கட்டடத்தில் ஆதரவற்றோர் மையம் அமைத்தனர். இந்த நல்ல திட்டம் தொடர வேண்டும் என்பதே பலரது விருப்பம். எனவே, ஏழைகள் பயனடைய, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தன், உரிகம்
***
* மூடியது வருத்தம்
தங்கவயலை சேர்ந்தவர்கள் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். வெளியிடங்களில் இருந்து வருவோரில் சிலர், ஆதரவற்ற நிலையில் கண்ணுக்கு தென்படும் காலி இடங்களில் தங்கி விடுகின்றனர். சமுதாய பவனை மூடி வைத்துள்ளதால் வருத்தமாக உள்ளது. மீண்டும் திறக்க வேண்டும்.
ராஜசேகர், எஸ்.டி.பிளாக்
***
* குறைந்தபட்ச கட்டணம்
ஆண்டர்சன்பேட்டையில் உள்ள சமுதாய பவனை, வசதியற்றவர்களின் திருமணம், சுபநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கலாம். குறைந்தபட்ச கட்டணம் வசூலித்து கொள்ளலாம். மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் வீணாக கூடாது.
- ஜெகதீஷ், கில்பர்ட்ஸ் வட்டம்
***
மீண்டும் வருமா?
தங்கச்சுரங்க தொழிற்சங்க வரலாற்றில் முக்கிய தலைவராக விளங்கிய, எனது தந்தை ஆசிர், தொழிலாளர் நலனுக்காக பல சேவைகளை செய்தார். ஆயினும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தங்கச்சுரங்க நிறுவனத்திடம் ஒரு வீடு கூட பெறவில்லை. சமுதாய பவனை ஏழைகள் தங்கும் இடமாக மீண்டும் திறக்க வேண்டும்.
- பிரபு ஆசிர், அசோகா நகர்
***

