இருமுடிகட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க தேவசம்போர்டு வேண்டுகோள்
இருமுடிகட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க தேவசம்போர்டு வேண்டுகோள்
ADDED : நவ 07, 2024 02:18 AM
சபரிமலை:சபரிமலை வரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை பக்தர்கள் தலையில் ஏந்தி வரும் இருமுடி கட்டில் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர் , சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும். நெய் தேங்காயில் உள்ள நெய்யை உடைத்து பாத்திரத்தில் எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு வழங்குவர். தேங்காய்கள் 18 படிகள் ஏறும் போது அடிக்கப்படுகிறது. அரிசி பாயாச வழிபாடு கவுண்டர்களில் வழங்க முடியும்.
மீதமுள்ள சாம்பிராணி, பன்னீர், கற்பூரம் ,மஞ்சள் போன்ற பொருள்கள் மாளிகைப்புறம் கோயில் அருகே விட்டு செல்கின்றனர். இவற்றை பூஜைக்கு பயன்படுத்த முடியாததால் பக்தர்கள் இதை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரி, மேல் சாந்தி போன்றோர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும் பக்தர்கள் இதைக் கொண்டு வந்து மாளிகைப்புறம் அருகே போடுகின்றனர்.
இவை டிராக்டரில் அள்ளப்பட்டு காட்டுப் பகுதியில் எரிக்கப்படுகிறது. எனவே இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை கொண்டுவர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. குரு சுவாமிகள் இது தொடர்பாக பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் சீசனில் தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமும், பத்தாயிரம் பேர் ஸ்பார்ட் புக்கிங் மூலமும் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் முன் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய முடியாமல் ஸ்பாட் புக்கிங் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கூறியுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக கியூ ஆர் கோடு மற்றும் புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்பட உள்ளது.