தகவல் தொழில்நுட்பம் மூலம் பக்தர்களின் பயணத்தை சுலபமாகும் தேவசம்போர்டு தலைவர் தகவல்
தகவல் தொழில்நுட்பம் மூலம் பக்தர்களின் பயணத்தை சுலபமாகும் தேவசம்போர்டு தலைவர் தகவல்
ADDED : டிச 19, 2025 04:41 AM
சபரிமலை: தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி பக்தர்களின் சபரிமலை பயணத்தை சுலபமாக்குவதற்கான முயற்சிகள் உடனடியாக தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.
சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் நடக்கும் அன்னதானத்தில் மதியம் வழங்கப்படும் வெரைட்டி ரைசுக்கு பதிலாக பழம், பப்படம், பாயசத்துடன் கூடிய விருந்து உணவு டிச., 21 முதல் வழங்கப்படும். இதில் இருந்து வந்த சில நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. ஸ்பாட் புக்கிங் விஷயத்தில் கடுமையான நிலையை தேவசம்போர்டு எடுக்காது. இதற்கு கோர்ட் தேவசம் போர்டுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது.
சன்னிதானத்தில் அவ்வப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஸ்பாட் புக்கிங் வழங்கப்படும்.
தற்போது அதிக நேரம் காத்து நிற்காமல் பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். எருமேலியிலிருந்து அழுதை வழியாக பம்பை வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்குவது தொடர்பாக வனத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் சிரமப்படாமல் தரிசனம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்கிறது.இந்த சீசன் மட்டுமல்லாமல் அடுத்த சீசனையும் சுமுகமாக நடத்துவதற்கான ஆலோசனைகள் தொடங்கியுள்ளது.
2026-27ம் ஆண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டு முக்கியமான திட்டங்கள் உடனடியாக தொடங்கப்படும். இதில் புதிதாக ஒரு அரவணை பிளான்ட் தொடங்குவது முக்கியமாக இருக்கும். இதன் மூலம் தினமும் 5 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்ய முடியும்.
தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி சபரிமலை சன்னிதானத்தில் உள்ள நிலைமைகளை பக்தர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அலைபேசியில் வசதிகள் செய்யப்படும். நிலக்கல்லிலிருந்து பம்பை வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.
சன்னிதானத்தில் எவ்வளவு நேரம் கியூ நிற்க வேண்டும் போன்றவை பக்தர்களின் அலைபேசியில் தெரிவதற்கான வசதி செய்யப்படும். தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பக்தர்களின் பயணத்தை சுலபமாக்குவதற்கான முயற்சிகளை தேவசம்போர்டு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

