ஹாசனில் பிரஜ்வல் போட்டி மீண்டும் உறுதி செய்த தேவகவுடா
ஹாசனில் பிரஜ்வல் போட்டி மீண்டும் உறுதி செய்த தேவகவுடா
ADDED : ஜன 25, 2024 04:48 AM

ஹாசன் : “லோக்சபா தேர்தலில் பா.ஜ. - ம.ஜ.த. கூட்டணி சார்பில், ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவார்,” என, மீண்டும் ஒரு முறை தேவகவுடா உறுதிபடுத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ. - ம.ஜ.த. கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஹாசன் தொகுதி ம.ஜ.த., என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி. ஆக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.
வரும் லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில், பிரஜ்வல் போட்டியிடுவார் என்று கடந்த மாதம், தேவகவுடா அறிவித்தார். ஆனால் இதற்கு ஹாசன் பா.ஜ. தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பிரஜ்வல் போட்டியிட்டால், அவரை ஆதரிக்க மாட்டோம் என்றும் கூறி இருந்தனர்.
இந்நிலையில், ஹாசன் சென்னராயப்பட்டணாவில் நேற்று நடந்த ம.ஜ.த. தொண்டர்கள் கூட்டத்தில் தேவகவுடா பேசியதாவது:
காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அரசில் குமாரசாமி, முதல்வராக இருந்தபோது, விவசாயிகளின் 25,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். ஆனால், அவர் ஏன் முதல்வர் பதவியில் இருந்து இறக்கி விடப்பட்டார் என்று தெரியவில்லை. தற்போது அதிகாரிகள் இடமாற்றத்தில் ஊழல் நடக்கிறது.
குமாரசாமி முதல்வராக இருந்தபோது யாரிடமாவது பணம் பெற்றார் என்றால் கூறுங்கள். நான் மன்னிப்புக் கேட்கிறேன். என் அரசியல் வாழ்க்கையில் இதுவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. தேவகவுடா தவறு செய்தார் என்று கூற, காங்கிரசாரால் ஒரு சிறிய தவறை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் என்னை நிற்க வைத்து தோற்கடித்தனர். ம.ஜ.த. குடும்ப கட்சி என்று கூறுகின்றனர். தொண்டர்களுக்கான கட்சி. சித்தராமையாவை நான் உயர்வாக நினைத்தேன். ஆனால் அவரது ஆட்சியில் மாநிலத்தின் நிலைமை மோசமாக உள்ளது.
துணை முதல்வர் நடத்திய மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பெண் அதிகாரி ஒருவர் மீது புகார் கூறப்பட்டது. அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவார். அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு அவர்பேசினார்.