வளர்ச்சி திட்டப் பணிகள் நிர்ணயித்த காலத்துக்குள் முடிக்கப்படும்: முதல்வர் உறுதி
வளர்ச்சி திட்டப் பணிகள் நிர்ணயித்த காலத்துக்குள் முடிக்கப்படும்: முதல்வர் உறுதி
ADDED : பிப் 01, 2026 03:44 AM

புதுடில்லி: ''டில்லி மாநகரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மெஹ்ராலியில், 235 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டப் பணிகளை முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
மெஹ்ராலியில் விரிவான சீரமைப்பு மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
டில்லி மாநகரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை டில்லி பா.ஜ., அரசு உறுதி செய்துள்ளது. டில்லியின், 70 சட்டசபைத் தொகுதிகளிலும் திட்டங்கள் சரியான நிர்ணயித்த காலத்துக்குள் செயல்படுத்தப்படும்.
சாலைகளை சீரமைத்தல், பழுது பார்த்தல், சிதிலமடைந்த சமுதாயக் கூடங்களை புதுப்பித்தல், பொதுக் கழிப்பறைகள் கட்டுதல், பூங்காக்களை அழகுபடுத்துதல், குழந்தைகளுக்கான ஊஞ்சல்கள் அமைத்தல் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை அமைத்தல் ஆகிய பணிகள், மெஹ்ராலியில் 235 கோடி ரூபாய் செலவில் செய்யப்படும்.
பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, டில்லி ஜல் போர்டு ஆகியவை ஒருங்கிணைந்து இந்தப் பணிகளை செய்கின்றன. பல துறைகளின் நிதியால் மெஹ்ராலியில் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தெற்கு டில்லி பா.ஜ., - எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி, மெஹ்ராலி பா.ஜ., - எம்.எல்.ஏ., கஜேந்தர் யாதவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநகராட்சிக்கு ரூ.500 கோடி டில்லி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைநகர் டில்லி முழுதும் துாய்மைப் பணிகளை மேம்படுத்த, டில்லி மாநகராட்சிக்கு, 500 கோடி ரூபாய் விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், மாநகரில் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் இந்த நிதியை பயன்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் டில்லி அரசு மாநகராட்சிக்குக் வழக்கமான 300 கோடி ரூபாயை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங், நிலைக்குழுத் தலைவர் சத்ய சர்மா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

