அந்தமானில் வளர்ச்சிப்பணி நடக்கவில்லை: துணை நிலை கவர்னர் மீது பா.ஜ., எம்.பி., குற்றச்சாட்டு!
அந்தமானில் வளர்ச்சிப்பணி நடக்கவில்லை: துணை நிலை கவர்னர் மீது பா.ஜ., எம்.பி., குற்றச்சாட்டு!
UPDATED : அக் 05, 2024 09:58 PM
ADDED : அக் 05, 2024 09:37 PM

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் துணை நிலை கவர்னராக உள்ள ஜோஷியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, அக்டோபர் 8ல் பேரணி நடத்தப் போவதாக, பா.ஜ., எம்.பி., பிஷ்ணு பதா ரே அறிவித்துள்ளார்.
இன்று போர்ட் பிளேரில் பா.ஜ., தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்டோபர் 8ம் தேதி கண்டனப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பிஷ்ணு பதா ரே கூறியதாவது:
அந்தமான் நிகோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்திற்கு துணைநிலை கவர்னராக 2017ம் ஆண்டு ஜோஷி நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்றது முதல் இன்று வரை எவ்வித வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை.
மக்களை துன்புறுத்துவது, வளர்ச்சியை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் கவர்னர் ஜோஷியை நீக்குவது குறித்து, இன்று கட்சித் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அக்டோபர் 8ல் கண்டனப் பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
காலை 8 மணிக்கு எதிர்ப்புப் பேரணி தொடங்கும், ராஜ் நிவாஸில், கவர்னரை சந்திக்க விடாமல் போலீசார் எங்களைத் தடுக்க முயன்றால், நாங்கள் போக்குவரத்தை நிறுத்துவோம். மேலும், அன்று காலை 2 மணி முதல் மதியம் 2 மணி வரை, அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படும்.
கவர்னரை நீக்கக் கோரி நேற்று ராஜ் நிவாஸுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டேன்.தலைமைச் செயலாளர் கேசவ் சந்திராவை சந்தித்ததையடுத்து, அவர் தர்ணாவை வாபஸ் பெற கேட்டுக்கொண்டார்.
நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க, கவர்னரிடம் நேரம் கேட்டேன், ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை.
சுற்றுலா, ரியல் எஸ்டேட், சுகாதாரம், கல்வி, சாலைகள் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்து முக்கியமான துறைகளும் கவர்னர் ஜோஷியின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளன. நான் முன்வைத்த கோரிக்கைகளுக்கு கவர்னர் மாளிகை பதில் அளிக்கவில்லை. எனவேதான் கவர்னருக்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்தோம்.
இவ்வாறு பதா ரே கூறினார்.
பா.ஜ., எம்.பி., கட்சியினருடன் இணைந்து, துணைநிலை கவர்னருக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது அந்தமான் நிக்கோபாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.