எஸ்.சி., - எஸ்.டி., காலனியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
எஸ்.சி., - எஸ்.டி., காலனியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : பிப் 13, 2026 12:35 AM

புதுடில்லி : டில்லியில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., காலனியில், 85 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களை, முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார்.
திமார்புர் பகுதியில் உள்ள மல்காகஞ்ச் சவுக் பகுதியில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., இன மக்கள் வசிக்கும் காலனி பகுதிகளில், 146 திட்டங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார். அவற்றின் மதிப்பு, 85 கோடி ரூபாய்.
அந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
இந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எங்கள் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதில் இடம்பெற்றுள்ள பல திட்டங்கள், பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களுக்கு மிகவும் தேவையானவை. குறிப்பாக, பல ஆண்டு களாக முடக்கப்பட்ட பல திட்டங்களுக்கு எங்கள் அரசு உயிர் கொடுத்து உள்ளது.
குறிப்பாக, சாலையோரங்களில் மழை நீர் செல்ல வழி ஏற்படுத்துவது, மேம்பாலங்கள் கட்டுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு ஹாஸ்டல்கள் கட்டுவது, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கோச்சிங் மையங்களை நடத்துவது என பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தற்போது, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

