ADDED : ஜன 02, 2025 02:46 AM

திருப்பதி :திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர், கழுத்து மற்றும் கைகளில் 5 கிலோ தங்க நகைகள் அணிந்து வந்து, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான இவர், தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், தெலுங்கானா ஹாக்கி விளையாட்டு சங்கத் தலைவராகவும் உள்ளார்.
இவர், எப்போது பொது இடங்களுக்கு சென்றாலும் கழுத்து மற்றும் கைகளை மறைக்கும் அளவுக்கு தடிமனான பல்வேறு தங்கச் சங்கிலி அணிந்து செல்வார். இதனால், இவரை 'தங்க மனிதர்' என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
புத்தாண்டை ஒட்டி இவர் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அப்போது இவர் அணிந்திருந்த நகைகளை பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரை மொபைல் போனில் படம் பிடித்தனர்.
தங்க நகைகள் மீதான விருப்பத்தால், அதிகஅளவில் நகைகளை அணிந்திருப்பதாக விஜயகுமார் கூறினார். அவர் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு 3.60 கோடி ரூபாய்.