விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி
விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி
ADDED : அக் 27, 2024 01:16 AM
புதுடில்லி: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பைகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்கள் இருமுடி கட்டிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றை, விமானங்களில் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தர்களின் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்ல பி.சி.ஏ.எஸ்., எனப்படும் சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துஉள்ளது. இதற்காக, பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விமானத்திற்குள் இருமுடிகளை எடுத்துச்செல்லும் முன், விமான நிலையங்களில் உள்ள எக்ஸ் - ரே, வெடிபொருள் கண்டறியும் கருவி ஆகியவற்றின் வாயிலாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் அனுமதிக்கப்படுவர் என்றும், இந்த தளர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சமூக வலைதளத்தில் கூறுகையில், 'சபரிமலை பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், இருமுடிகளை விமானத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.