அதிகாலையே பிரசாதம் கேட்கும் பக்தர்கள்: 'ஆன்லைன்' சேவை ரத்து செய்யப்படுமா?
அதிகாலையே பிரசாதம் கேட்கும் பக்தர்கள்: 'ஆன்லைன்' சேவை ரத்து செய்யப்படுமா?
ADDED : ஜூலை 31, 2024 05:09 AM

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட 34,000 கோவில்கள் உள்ளன. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் தரும் 205 கோவில்கள், 'ஏ' பிரிவு என்றும், 5 முதல் 25 லட்சம் ரூபாய் வருவாய் தரும் 193 கோவில்கள், 'பி' பிரிவு என்றும், 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் தரும் கோவில்கள், 'சி' பிரிவு என்றும் பிரிக்கப்பட்டு உள்ளன.
சிக்கல்
'ஏ, பி' பிரிவு கோவில்களில் ஆன்லைன் வாயிலாக பூஜைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. பக்தர்கள், ஆன்லைனில் அர்ச்சனை உட்பட பல சேவைகளுக்கு முன்பதிவு செய்கின்றனர். இவர்கள் மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பூஜைகளில் பங்கேற்ற பின், பதிவு செய்த எண்களை காண்பித்து, பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம்.
ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாக கோவில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, அறநிலைய துறை கமிஷனருக்கு, அனைத்து கர்நாடக ஹிந்து கோவில்கள் அர்ச்சகர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு பொதுச் செயலர் தீக் ஷித் கூறியதாவது: அறநிலைய துறை கோவில்களில் மொபைல் செயலி சேவை, சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இரவில், மொபைல் செயலி வாயிலாக பூஜைக்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள், மறுநாள் காலையே வந்து, 1 கிலோ புளியோதரை, 1 கிலோ பொங்கல் பிரசாதம் தருமாறு கேட்கின்றனர்.
பூஜை கட்டணம்
பிரசாதம் தயார் செய்ய ஊழியர்களும், போதிய நேரமும் தேவை. அதிகாலையே தயார் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அபிஷேகத்துக்கான பால், தயிர் உட்பட பொருட்களைப் பதப்படுத்த எங்களிடம் கிடங்குகள் இல்லை. மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில், தட்சிண கன்னடாவின் குக்கே சுப்பிரமணியா கோவில்களில் மட்டுமே உணவு பதப்படுத்தும் கிடங்குகள் உள்ளன.
மேலும், ஆன்லைனில் பதிவு செய்யப்படும் பூஜை கட்டணங்கள், தனியார் ஏஜென்சிகளுக்கு சென்று, இரண்டு வாரங்களுக்கு பின்னரே, கோவிலுக்கு வருகிறது. பிரசாதம் தயாரிக்க, போதுமான பணம் தேவை. இது சேவையாக இல்லாமல் தொழிலாக மாறிவிட்டது. இது, கோவிலின் புனிதத் தன்மையை குறைத்து விடும். எனவே, கோவில்களில் ஆன்லைன் சேவை பதிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.