ADDED : பிப் 09, 2024 07:24 AM

ராம்நகர் கனகபுராவில் உள்ளது காபலு கிராமம். இந்த கிராமத்தில் கபாலம்மா கோவில் உள்ளது. மலை உச்சியில் இருக்கும் இக்கோவில், மலை அடிவாரத்தில் இருந்து 1,300 மீட்டர் உயரம் கொண்டது.
இந்த கோவிலை சக்தி தெய்வம் அல்லது கபாலம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
கபாலு மற்றும் அதனை சுற்றியுள்ள 28 கிராமங்களில் உள்ள கோவில்களில், கபாலம்மா கோவில் தான் பெரியது. இதனால் அந்த கோவிலுக்கு கனகபுரா தாலுகா பக்தர்கள் தினமும் சென்று வருகின்றனர்.
பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்ய, ஏராளமான பக்தர்கள் கபாலம்மாவை தேடி வருகின்றனர். திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
பழங்கால கோவில் என்பதால் கட்டட கலைகளும் பிரமிப்பாக உள்ளது. இந்த கோவிலின் முக்கிய நிகழ்ச்சியாக கபாலம்மா திருவிழா உள்ளது.
திருவிழாவை ஒட்டி நடக்கும் தேரோட்டத்தில், அம்மன் வீற்றிருக்கும் தேரை இழுப்பது 'மங்களரமான நிகழ்வு' என்று நினைக்கும் பக்தர்கள், தேரின் வடத்தை பிடித்து இழுக்க போட்டி போடுவர்.
இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் கோவில் காளையை பார்ப்பதற்கு பக்தர்கள் குவிகின்றனர்.
காளைக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டி கொள்ளும் பக்தர்கள், காளையின் கொம்பில் பணத்தை கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
காளையின் முன்பு படுத்து கொள்கின்றனர். காளை தங்கள் மீது ஏறி நடந்து செல்வதை, பாக்யமாக கருதுகின்றனர். சிறு குழந்தைகளை கூட காளையின் முன்பு படுக்க வைத்து ஆசி வாங்குகின்றனர்.
பெங்களூரில் இருந்து இந்த கோவில் 84 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. பஸ்சில் செல்வோர் கனகபுரா சென்று, அங்கிருந்து செல்லலாம். கார், பைக்குகளில் செல்வோர், நைஸ் ரோடு வழியாக சென்று, அங்கிருந்து கனகபுரா ரோட்டில் செல்லலாம்
.- நமது நிருபர் -

