டில்லி குடிசை பகுதிகளை மேம்படுத்த தாராவி மாடல் பின்பற்றப்படும்: ரேகா குப்தா
டில்லி குடிசை பகுதிகளை மேம்படுத்த தாராவி மாடல் பின்பற்றப்படும்: ரேகா குப்தா
ADDED : ஜூன் 20, 2025 08:41 PM
புதுடில்லி:''தலைநகர் டில்லியில் உள்ள குடிசை பகுதிகள், மும்பையின் தாராவி நகர மாடலில் புனரமைக்கப்படும்,'' என, மாநில முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
அவர் கூறியதாவது:
டில்லியின் சில குடிசை பகுதிகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில், அரசுக்கு எதிராக தவறான பிரசாரத்தை சிலர் மேற்கொண்டுள்ளனர். எங்களை பொறுத்த மட்டில், குடிசை பகுதிகளில் இருந்து யாரும் வலுக்கட்டயமாக அப்புறப்படுத்த மாட்டார்கள். அதற்காக, ரயில்வே பாதையில் வீடுகள் கட்டி குடியேறினால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?
அத்தகைய நிலையில், அந்த வீடுகளை இடிக்கத் தான் வேண்டும். ரயில் விபத்துகள் நடந்தால், யார் பொறுப்பு? எனவே, இந்த விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளது. குடிசை பகுதிகள், திடீரென இடிக்கப்பட மாட்டாது. அனைவருக்கும் வீடுகள் வழங்கிய பிறகு தான், குடிசைகள் அப்புறப்படுத்தப்படும்.
டில்லி நகரில் உள்ள, 675 குடிசை பகுதிகளையும், மும்பை தாராவி குடிசை பகுதி போல புனரமைக்கப்படும். அதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும்.
மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு, முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆஜராகியுள்ளார். அவர் மட்டுமின்றி, இந்த வழக்கில் தவறு செய்த அனைவரும் ஆஜராகத் தான் வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆஜராகத் தான் வேண்டும். அவர் எவ்வளவு நாளுக்குத் தான், பஞ்சாபில் பதுங்கியிருக்க முடியும். டில்லி வந்ததும், அவர் விசாரணைக்கு ஆஜராகியே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.