கெஜ்ரிவால் கார் மீது கல் வீசியதா பா.ஜ.,? இல்லை என்கிறது போலீஸ்
கெஜ்ரிவால் கார் மீது கல் வீசியதா பா.ஜ.,? இல்லை என்கிறது போலீஸ்
ADDED : ஜன 18, 2025 11:21 PM
புதுடில்லி:புதுடில்லி சட்டசபைத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது, பா.ஜ.,வினர் கல்வீசி தாக்கியதா ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள பா.ஜ., தங்கள் கட்சி தொண்டர்கள் மீது கெஜ்ரிவாலின் கார் மோதியது என கூறியுள்ளது.
புதுடில்லி சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பா.ஜ., மூத்த தலைவர் பர்வேஷ் வர்மா களம் இறங்கியுள்ளார்.
நேற்று மாலை கெஜ்ரிவால் மற்றும் வர்மா ஆகியோர் தொண்டர்களுடன் தீவிர பிரசாரம் செய்தனர். அப்போது, கெஜ்ரிவால் கார் மீது பா.ஜ.,வினர் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு போலீசார் கும்பலைக் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து, ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரசாரத்துக்கு வந்த போது அவரது கார் மீது பா.ஜ.,வினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்' என கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ., 'எங்கள் கட்சியின் தொண்ர்களைத்தான் ஆம் ஆத்மி தொண்டர்கள் தாக்கினர். காயமடைந்த பா.ஜ., தொண்டர்கள் லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்'என கூறியுள்ளது.
பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கெஜ்ரிவாலின் கார், இரண்டு பா.ஜ., தொண்டர்கள் மீது மோதியது. காயம் அடைந்த இருவரும் லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தோல்வி பயத்தால் மனித உயிரின் மதிப்பை கெஜ்ரிவால் மறந்து விட்டார்,”என, கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இரு கட்சியினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வரும் நிலையில், அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கெஜ்ரிவால் கார் மீது யாரும் கற்களை வீசவில்லை. சிலர், கெஜ்ரிவாலுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். அவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டோம். இந்தக் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.