ரூ.1,600 கோடி அரசு நிலத்தை காங்., - எம்.எல்.ஏ., அபகரித்தாரா? 11 அதிகாரிகள் மீதும் லோக் ஆயுக்தாவில் புகார்
ரூ.1,600 கோடி அரசு நிலத்தை காங்., - எம்.எல்.ஏ., அபகரித்தாரா? 11 அதிகாரிகள் மீதும் லோக் ஆயுக்தாவில் புகார்
ADDED : டிச 17, 2024 10:18 PM

பெங்களூரு; மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்ததாக, லோக் ஆயுக்தாவில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக, வருவாய் துறை அதிகாரிகள் 11 பேர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ். இவர் நேற்று காலை, பெங்களூரு லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு சென்று, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, வருவாய் அதிகாரிகள் 11 பேர் மீது நில அபகரிப்பு புகார் செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு தெற்கு தாலுகா, கெங்கேரி கிராமத்தில் சர்வே எண் 69ல், 183 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.
இதில் 37.20 ஏக்கர் நிலத்தை நிலம் இல்லாத 2a5 பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், தனி நபர்களுக்கு கடந்த 1973ல் அரசால் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 1.20 ஏக்கர் நிலம் கிடைத்தது.
போலி ஆவணம்
ஆனால், நிலம் பெற்றவர்களில் பலர் இறந்து விட்டனர். இந்த நிலம் தற்போது உத்தரஹள்ளி -கெங்கேரி சாலையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையின் அருகே வருகிறது.
தற்போது அந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து சட்டவிரோதமாக சிலர் கைப்பற்றி உள்ளனர். தற்போது 37.20 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 1,600 கோடி ரூபாய் ஆகும்.
இந்த நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, தங்கும் விடுதியின் உரிமையாளர் சுரேந்திரா, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் அபகரித்து உள்ளனர்.
அரசு பாறை நிலமாக வகைப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை, சட்டபூர்வமாக தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது. ஆனாலும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அபகரிப்பு நடந்துள்ளது.
இது தொடர்பாக ஊழல், மோசடி, சதி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என லோக் ஆயுக்தாவிடம் புகார் அளித்துள்ளேன்.
அமைச்சருக்கு கடிதம்
இந்த வழக்கில், நீதிபதி அல்லது சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாலகிருஷ்ணாவுடன், பெங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலகத்தில் உதவி கமிஷனராக வேலை செய்யும் ரஜினிகாந்த், அதிகாரிகள் மஞ்சுநாத், குஷ்மா லதா, சச்சின், சசிகுமார், ரவிசங்கர், லட்சுமி தேவி, குருராஜ், தினேஷ், ராம் லட்சுமணன் ஆகியோரும், விடுதியின் உரிமையாளரும் நில அபகரிப்பில் கைகோர்த்துள்ளனர்.
இது தொடர்பாக வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். 206 பக்க புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதரவாளர்
பாலகிருஷ்ணா, துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர் ஆவார். குமாரசாமி குடும்பத்திற்கு எதிராக பேச வேண்டும் என்றால் வரிந்து கட்டி முதல் ஆளாக நிற்க கூடியவர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலின் போது, பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்தை, பாலகிருஷ்ணா தேவையின்றி விமர்சனம் செய்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஆர்.ஆர். நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 'விவசாயிகளின் நிலத்தை அபகரித்து அவர்களின் ரத்தத்தை பாலகிருஷ்ணா குடிக்கிறார்' என்று கூறியிருந்தார்.
ஆனால், 'இதுவரை யாருடைய நிலத்தையும் நான் அபகரிக்கவில்லை' என்று பாலகிருஷ்ணா கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது அரசு நிலத்தை அபகரித்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த, பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் தயாராகி வருகின்றனர்.