ADDED : ஜன 02, 2025 06:26 AM

பெங்களூரு: ''காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடாவிடம் இருந்து, மலவள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமி பணம் பெற்று இருக்கலாம்,'' என, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., அன்னதானி கூறி உள்ளார்.
பெங்களூரு ரூரல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, வனிதா என்பவர் நடத்தும் நகைக்கடையில் இருந்து 8 கோடி ரூபாய்க்கு, நகை வாங்கி மாண்டியா மலவள்ளியைச் சேர்ந்த ஐஸ்வர்யா கவுடா என்பவர் மோசடி செய்தார்.
இவ்வழக்கில் ஐஸ்வர்யா, அவரது கணவர் ஹரிஷ் ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
ஜே.பி. நகரில் வசிக்கும் நகை வியாபாரியான சோனு என்பவரும், ஐஸ்வர்யா தன்னிடம் 5.50 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தார் என்று, வீடியோவில் பேசி இருந்தார். ஆனால் அவர் இதுவரை புகார் அளிக்கவில்லை.
வீட்டில் சோதனை
இதற்கிடையில் ஆர்.ஆர். நகரில் வசிக்கும், திப்பேகவுடா அவரது மனைவி ஷில்பா ஆகியோரிடம் இருந்தும் 3.25 கோடி ரூபாய் மற்றும் 430 கிராம் நகைகளை ஐஸ்வர்யா மோசடி செய்ததும் தெரிய வந்தது.
ஐஸ்வர்யா மீது ஷில்பா நேற்று ஆர்.ஆர். நகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணையை போலீசார் துவக்கியுள்ளனர். ஆர்.ஆர். நகரில் உள்ள ஐஸ்வர்யா வீட்டிற்குச் சென்று, போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை மாண்டியா மேற்கு போலீஸ் நிலையத்தில், ரவிகுமார் என்பவர் அளித்த புகாரில், 'நிலம் வாங்கித் தருவதாக என்னிடம், ஐஸ்வர்யா 55 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்துவிட்டார்' என்று கூறி இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவாகவில்லை. விசாரணை நடக்கிறது.
நகை வியாபாரி சோனு வீடியோவில் பேசும்போது, 'ஐஸ்வர்யா, என்னை மாண்டியாவுக்கு அழைத்துச் சென்றார். நான் அவரிடம் பணம் கேட்டபோது, எம்.எல்.ஏ., ஒருவரை வைத்து மிரட்டினார்' என்றும் கூறி இருந்தார்.
சி.பி.ஐ., விசாரணை
இப்படியான பரபரப்புக்கு மத்தியில், மலவள்ளி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., அன்னதானி நேற்று கூறியதாவது:
மோசடி வழக்கில் கைதான ஐஸ்வர்யாவுக்கும், மலவள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமிக்கும் இடையில் நட்பு உள்ளது. நரேந்திரசாமியை, ஐஸ்வர்யா அடிக்கடி சந்தித்துப் பேசி உள்ளார்.
மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி, சட்டசபை தேர்தலில் நரேந்திரசாமி வெற்றி பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்த வழக்கை அரசு, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.