ஐ.நா., தீர்மானங்களில் விலகி நின்றதா இந்தியா: அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!
ஐ.நா., தீர்மானங்களில் விலகி நின்றதா இந்தியா: அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!
ADDED : டிச 05, 2024 06:13 PM

புதுடில்லி:ஐ.நா., பொதுச்சபையில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு தீர்வு காண முன்வைக்கப்பட்ட 13 தீர்மானங்களில், இந்தியா 10 முறை ஆதரவாக வாக்களித்துள்ளது; 3 முறை விலகி நின்றது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்லிமென்டில் தெரிவித்தார்.
பாலஸ்தீனம் பிரச்னை தொடர்பாக ஐ.நா., சபையில் வரும் தீர்மானங்களில் ஓட்டளிக்காமல் இந்தியா விலகி நிற்பதாக, பார்லியில் உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து, அது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், 13 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் இந்தியா 10 தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தது; மூன்று தீர்மானங்களில் இருந்து விலகி நின்றது.
தற்போதைய நெருக்கடியிலும் கூட, பாலஸ்தீனத்திற்கு இந்தியா குறிப்பிடத்தக்க மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. மோதல் தொடங்கியதில் இருந்து, இந்தியா 70 மெட்ரிக் டன் உதவிகளை வழங்கியுள்ளது. இதில் 16.5 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனிய அகதிகளுக்காக உதவும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கு 5 மில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டது.
இஸ்ரேலுடன் சமாதானமாக வாழும், பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திரமான பாலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதை நோக்கி, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்..