சாவர்க்கர் இறைச்சி சாப்பிட்டாரா?: தினேஷ் குண்டுராவ் சர்ச்சை பேச்சு
சாவர்க்கர் இறைச்சி சாப்பிட்டாரா?: தினேஷ் குண்டுராவ் சர்ச்சை பேச்சு
ADDED : அக் 04, 2024 12:19 AM

பெங்களூரு: ''வீர் சாவர்க்கர் இறைச்சி சாப்பிட்டார். அவர், பசு வதைக்கு எதிரானவர் இல்லை,'' என, கர்நாடக காங்., அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில், மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ''சித்பவன் பிராமணரான வீர் சாவர்க்கர் இறைச்சி சாப்பிட்டார்.
''அவர் பசுவதைக்கு எதிரானவர் இல்லை. ஒருவகையில் அவர் நவீனமானவர். பிராமணரான அவர், இறைச்சி உண்பது பற்றி வெளிப்படையாக பிரசாரம் செய்தார். ஆனால், மகாத்மா காந்தி சைவ உணவு சாப்பிடுபவர். ஹிந்து மதத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் ஒரு ஜனநாயக நபர். முகமது அலி ஜின்னா ஒரு ஜனநாயகவாதி. அவர் தீவிர இஸ்லாமியர் இல்லை. ஆனால், சாவர்க்கர் ஒரு அடிப்படைவாதி,'' என்று பேசி இருந்தார்.
தினேஷ் குண்டுராவ் கருத்துக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மாநில எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''ஹிந்துக்களை விமர்சிப்பது தான் காங்கிரசின் வழக்கம். வீர் சாவர்க்கர் இறந்து விட்டார். சொர்க்கத்தில் இருக்கும் அவரை பற்றி பேசுவதை விட்டு விடுங்கள். ஹிந்து மதத்தில் மட்டும் தீமை உள்ளதா? அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.