விஸ்வேஸ்வரய்யா சிலையை இடித்து தள்ளியதா மாநகராட்சி?
விஸ்வேஸ்வரய்யா சிலையை இடித்து தள்ளியதா மாநகராட்சி?
ADDED : ஜன 08, 2024 11:44 PM
பெங்களூரு: சஜ்ஜன்ராவ் சதுக்கத்தில் இருந்த, விஸ்வேஸ்வரய்யா உருவச்சிலையை, பெங்களூரு மாநகராட்சி இடித்துத் தள்ளியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, நகரின் துணை போலீஸ் கமிஷனரிடம், வி.வி., புரம் குடியிருப்பு மக்கள் நல சங்கம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
மாநில அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, சஜ்ஜன்ராவ் சதுக்கத்தில், 2006ல் விஸ்வேஸ்வரய்யா சிலை அமைக்கப்பட்டது. அன்றைய கவர்னர், இந்த சிலையை திறந்து வைத்தார்.
அன்று முதல் ஆண்டுதோறும், இங்கு செப்டம்பர் 15ல், பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பெங்களூரு மாநகராட்சி திடீரென விஸ்வேஸ்வரய்யா சிலையை இடித்துத் தள்ளியுள்ளது.
சிலை பின் புறம் உள்ள, பாரத் காஸ் ஏஜன்சியினரின் வசதிக்காக, இது போன்று இடித்துத் தள்ளிவிட்டனர். மாநகராட்சியின் செயல், பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. பொது சொத்தை சேதப்படுத்தியது, மக்களின் உணர்வை புண்படுத்தியதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வி.வி.,புரம் உணவு வீதி மேம்படுத்தப்படுகிறது. எனவே விஸ்வேஸ்வரய்யாவின் சிலையை அகற்றி, பாதுகாப்புடன் வைத்துள்ளோம். பணிகள் முடிந்த பின், மீண்டும் அதே இடத்தில் சிலை நிறுவப்படும்' என்றனர்.