ADDED : பிப் 14, 2025 05:31 AM

வசந்த்நகர்: சக பெண் போலீஸ் அதிகாரியுடன் கள்ளக்காதலில் இருந்ததை தட்டி கேட்டதால், தன்னை கொல்ல முயன்றதாக கணவரான டி.எஸ்.பி., மீது, மனைவி புகார் செய்து உள்ளார்.
பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீஸ் நிலையத்தில், பயிற்சி டி.எஸ்.பி.,யாக உள்ளவர் கோவர்த்தன். இவரது மனைவி அம்ருதா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2014ல் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். வசந்த்நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கோவர்த்தனுக்கும், கார்வாரில் டி.எஸ்.பி.,யான பெண் அதிகாரி ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் 'வாட்ஸாப்'பில் மணிக்கணக்கில் பேசி வந்தனர்.
இதுபற்றி அறிந்த அம்ருதா, கணவரை கண்டித்தார். கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், மனைவியை சரமாரியாக தாக்கி கொலை செய்யவும் முயன்று உள்ளார். இதுபற்றி மாமனார், மாமியாரிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
வலுக்கட்டாயமாக மனைவியிடம் கோவர்த்தன் விவாகரத்து கேட்டு உள்ளார். இதனால் மனம் உடைந்த அம்ருதா, கணவர் மீது ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் கொலை முயற்சி புகார் செய்தார். கோவர்த்தன் மீது வழக்குப் பதிவானது. விசாரணை நடக்கிறது.