வேலை பளு காரணமாக கேரள பெண் உயிரிழப்பா? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
வேலை பளு காரணமாக கேரள பெண் உயிரிழப்பா? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
ADDED : செப் 20, 2024 12:26 AM

புதுடில்லி: தனியார் கணக்கு தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய 26 வயது கேரள பெண், வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்தில் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட் லாஜே தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன் பேரயில், 26; சி.ஏ., படித்து முடித்துள்ளார்.
பின், 'எர்னஸ்ட் அண்டு யங்' என்ற கணக்கு தணிக்கை நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'எஸ்.ஆர்., பாட்லிபாய்' என்ற நிறுவனத்தின், மஹாராஷ்டிரா மாநிலம் புனே கிளையில் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்தார்.
நான்கு மாதங்கள் பணி செய்த நிலையில், கடுமையான உடல் சோர்வு மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக, புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி ஜூலை 20ல் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அவரது தாய், 'எர்னஸ்ட் அண்டு யங்' நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை எழுதினார். அது, சமூக வலைதளங்களில் பரவியது.
அதில், தன் மகள் அன்னா செபாஸ்டியன் கடுமையான வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே துாக்கமின்மையால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இளம் வயதில் மரணம் அடைந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதை, 'எர்னஸ்ட் அண்டு யங்' நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் மேமானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், “அன்னா செபாஸ்டியனின் திடீர் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
“அவர் சிறிது காலம் தான் இங்கு பணியாற்றினார். இது போன்ற துயரமான நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம்,” என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய தொழிலாளர் துறை விசாரணை நடத்த வேண்டும் என, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, “அன்னா செபாஸ்டியனின் மரணத்தில் அவரது தாயார் தெரிவித்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்,” என மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே நேற்று உறுதி அளித்துள்ளார்.