ADDED : டிச 17, 2024 10:19 PM

பெலகாவி; “எடியூரப்பா மட்டும் பா.ஜ.,வை தனியாக வளர்த்தாரா?,” என, அக்கட்சி எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் இந்த நேரத்தில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மாநில தலைவர் விஜயேந்திரா விருந்து வைத்துள்ளார். ஆனால், நான் எந்த விருந்துக்கும் செல்லவில்லை.
தாவணகெரேயில் எங்களை விட்டுவிட்டு மாநாடு நடந்த முடிவு செய்துள்ளனர். என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற நினைக்கின்றனர். இது பற்றி எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக எத்னால்; கட்சியின் மாநிலத் தலைவராக மத்திய அமைச்சர் ஷோபா பதவி ஏற்க வேண்டும் என்று முன்பு விஜயேந்திரா அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் அடுத்த இரண்டு நாட்களில், மாநிலத் தலைவராக விஜயேந்திரா அறிவிக்கப்பட்டார். தந்தை எடியூரப்பா, மகன் விஜயேந்திரா இருவரும் சேர்ந்து நாடக கம்பெனி நடத்துகின்றனர். கர்நாடகாவில் பா.ஜ.,வை எடியூரப்பா மட்டும் தனியாக வளர்க்கவில்லை. அவருடன் சேர்ந்து நிறைய தலைவர்கள் உழைத்து உள்ளனர்.
ஆனால், எடியூரப்பா மட்டுமே கட்சியை வளர்த்ததாக அவரது போலி சீடர்கள் சொல்லிக்கொண்டு சுற்றுகின்றனர். எங்கள் கட்சி எம்.எல்.ஏ., முனிரத்னா தொடர்பான பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. இது பற்றி சட்டசபையில் விவாதிக்க தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.