மரங்களை வெட்ட அனுமதி தேவை என்பது தெரியாது: டில்லி கவர்னர் பதில்
மரங்களை வெட்ட அனுமதி தேவை என்பது தெரியாது: டில்லி கவர்னர் பதில்
ADDED : அக் 24, 2024 03:07 AM

புதுடில்லி, டில்லியின் ரிட்ஜ் வனப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்டுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது தனக்கு தெரியாது என, துணை நிலை கவர்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
டில்லியின் ரிட்ஜ் வனப்பகுதியில், ஆயுதப் படைகளுக்கான மருத்துவமனை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் மேற்கொள்வதற்காக சில மரங்கள் வெட்டப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த மரங்கள் வெட்டப்பட்டதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், டில்லி துணைநிலை கவர்னரும், டி.டி.ஏ., எனப்படும் டில்லி வளர்ச்சி ஆணையத்தின் தலைவருமான வி.கே. சக்சேனா பதில் மனு தாக்கல் செய்வதற்கு, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக தனிப்பட்ட முறையில், வி.கே. சக்சேனா நேற்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த மருத்துவமனை கட்டுமானம் தொடர்பாக கடந்த, பிப்., 3ல் நேரில் ஆய்வு செய்தேன்.
அப்போது, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, 600 மரங்கள் வெட்டப்பட வேண்டியது தொடர்பாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதைத் தொடர்ந்து, உரிய துறைகளின் அனுமதியுடன் அந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்தேன். ஆனால், ஜூனில் நடந்த டி.டி.ஏ., கூட்டத்தில்தான், இந்த மரங்களை வெட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்பது தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, பிப்ரவரியில் இந்த மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.
நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற விஷயம் எனக்கு தெரியாது. அது தொடர்பாக அதிகாரிகள் யாரும் எனக்கு தெரிவிக்கவும் இல்லை.
இந்த விஷயத்தில், மூன்று அதிகாரிகளே, மரங்களை வெட்டுவதற்கு தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து, செயல்படுத்தினர்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

