ADDED : அக் 23, 2024 11:00 PM

பெங்களூரு: 'கடவுள் எனக்கு அழகு, கல்வி என, அனைத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்' என, முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வரின் மகள் நிஷா தெரிவித்தார்.
பா.ஜ.,வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் நேற்று தாவிய நிலையில், அவரை பற்றி, அவரது மகள் நிஷா, பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.
இதுகுறித்து, நிஷா வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:
கடவுள் எனக்கு அழகு, அறிவு, நல்ல நிறம், கல்வி என, அனைத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை கொடுத்ததால், மனம் நொந்துள்ளேன்.
எனக்கு 13 வயது இருந்தபோது, என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பதை, நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை. என்னை மேற்படிப்பு படிக்கக் கூடாது என கட்டாயப்படுத்தினார்.
நான் மிகவும் கஷ்டப்பட்டு அமெரிக்காவில், கல்வியை முடித்து பட்டம் வாங்கித் திரும்பினேன். என்னை வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை. என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, ஏதாவது பணியில் அமர்த்தும்படி, என் தந்தையிடம் கேட்டேன். வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று ஆண்டுகள் அலைய வைத்தார்.
அதே நேரத்தில், என் அழகை கண்டு திரையுலகில் வாய்ப்பு வந்தது. ஆனால் அங்கும் கூட, என் தந்தை முட்டுக்கட்டை போட்டார். வாழ்க்கை நடத்த போராடுகிறேன். என்னை நீதிமன்றத்தில் நிறுத்தவும், அவர் தயங்கவில்லை. விரைவில் மேலும் பல விபரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு கூட, 'என் தந்தை என்னை பார்த்துக் கொள்ளவில்லை' என, நிஷா கண்ணீர் விட்டிருந்தார்.