தர்ஷனிடம் பணம் வாங்கவில்லை: ரேணுகாசாமியின் தந்தை கண்ணீர்
தர்ஷனிடம் பணம் வாங்கவில்லை: ரேணுகாசாமியின் தந்தை கண்ணீர்
ADDED : ஜன 17, 2025 07:27 AM

சித்ரதுர்கா: ''ஜாமினில் வெளியே வந்த நடிகர் தர்ஷனை சந்தித்து, நாங்கள் பணம் வாங்கவில்லை. ஆனால், பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன,'' என்று, ரேணுகாசாமி தந்தை காசிநாதய்யா கண்ணீருடன் கூறினார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33 கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன் ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில், தர்ஷனிடம் இருந்து ரேணுகாசாமி குடும்பத்தினர் பணம் பெற்றதாகவும், அந்தப் பணத்தில் புதிய கார் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின.
ரேணுகாசாமி தந்தை காசிநாதய்யா கூறியதாவது:
எனக்கு பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் பற்றி எல்லாம் தெரியாது. தர்ஷனிடம் நாங்கள் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை பார்த்து, எங்கள் உறவினர்கள் மொபைல் போனில் எங்களை தொடர்பு கொண்டு கேட்கின்றனர்.
இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஜாமினில் வெளியே வந்த தர்ஷனை நாங்கள் சந்திக்கவும் இல்லை; பணம் வாங்கவும் இல்லை. தயவுசெய்து இதுபோன்ற பொய்யான தகவலை யாரும் பரப்ப வேண்டாம்.
ரேணுகாசாமி பயன்படுத்திய பைக் ரிப்பேராக உள்ளது. அந்த பைக்கை கூட இன்னும் எங்களால் சரி செய்ய முடியவில்லை. நாங்கள் எப்படி கார் வாங்குவோம். போலி தகவல் பரப்பாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்போம்.
தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்து இருப்பதை வரவேற்கிறோம். எங்கள் சார்பில் மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. சட்டப்பூர்வ முயற்சிகளை கையாண்டு வரும் மாநில அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
எனது மருமகள் சகானாவுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம். பணி கிடைக்கா விட்டால் எனது மருமகளும், பேரக்குழந்தையும் நடுத்தெருவில் நிற்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.