கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்தது
கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்தது
ADDED : ஏப் 02, 2025 06:08 AM

பெங்களூரு : கர்நாடகாவில் டீசல் விலை நேற்று லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதத்துடன் இவர்கள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆக போகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சி பணிகள் செய்து எந்த சாதனையும் படைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையை உயர்த்தியதே இவர்களின் சாதனையாக உள்ளது.
பால், பஸ், மெட்ரோ ரயில் உள்ளிட்டவைகளின் விலை மற்றும் கட்டணத்தை உயர்த்தினர். சொத்து வரியுடன் சேர்த்து குப்பைகளுக்கு வரி வசூலிப்பது; குடியிருப்பு பகுதிகளில் உள்ள பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்த கட்டணம் என்று, ஒரே நாளில் நேற்று மக்கள் தலையில் இடிகளை இறக்கினர்.
இந்நிலையில் நேற்று இரவு மக்களுக்கு, மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அரசு அளித்துள்ளது.
கர்நாடகாவில் டீசல் மீதான விற்பனை வரியை 18.44 சதவீதத்தில் இருந்து 21.17 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான சிறிது நேரத்தில், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்தது.
இதன் மூலம் லிட்டருக்கு 89.02 ரூபாயாக இருந்த டீசல் 91.02 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.