டிஜிட்டல் கைது மோசடி; சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.11.8 கோடி பறிப்பு
டிஜிட்டல் கைது மோசடி; சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.11.8 கோடி பறிப்பு
ADDED : டிச 23, 2024 07:59 PM

பெங்களூரூ: பெங்களூருவில் நடந்த டிஜிட்டல் கைது மோசடியில், 39 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ரூ.11.8 கோடியை இழந்தார். அவரிடம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த மோசடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை நடந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நவம்பர் 11 அன்று முதல் அழைப்பு வந்தது.
'ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்கள் சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் துன்புறுத்தல் செய்திகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக' சாப்ட்வேர் இன்ஜினியரிடம், அந்த போன் அழைப்பில் கூறியுள்ளனர்.
மும்பையின் கொலாபா சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உங்களை டிஜிட்டல் கைது செய்வதாகவும் கூறியுள்ளனர்.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், நேரில் வந்து கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று போனில் அழைத்தவர் அச்சுறுத்தினார்.
மேலும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கும்படியும் எச்சரித்துள்ளார். 'ஸ்கைப்' செயலி பதிவிறக்கம் செய்யச் சொல்லி பேசினர். வீடியோ அழைப்பில் பேசிய அந்த நபர், போலீஸ் சீருடையில் இருந்துள்ளார்.
அவர், சாப்ட்வேர் இன்ஜினியரிடம், 'உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது' என்று கூறியுள்ளார். போலீஸ் சீருடையில் இருந்த இன்னொருவர், 'வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேட்கத்தவறினால் உங்கள் மொத்த குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம்' என மிரட்டினார்.
இதனால் சாப்ட்வேர் இன்ஜினியர் பதறிப்போனார். அவர் கூறியபடி எல்லாம் செய்துள்ளார். கைது அச்சத்தில், அவர்கள் கூறியபடி, பல பரிவர்த்தனைகளில் ரூ.11.8 கோடியை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பிய பிறகும், மீண்டும் கேட்பதை அந்த நபர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் தான் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்ட அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில், அவர் மோசடி கும்பலிடம் பணத்தை பறிகொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்ததற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி.என்.எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.