ADDED : பிப் 06, 2025 12:27 AM
கொச்சி: கேரளாவில், மிளகு பறிக்கும் போது மரக்கிளை முறிந்து கிணற்றுக்குள் தவறி விழுந்த கணவரை, தைரியமாக இறங்கி காப்பாற்றிய மனைவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கேரளாவின், கொச்சி அருகேயுள்ள பிரவாம் நகராட்சியைச் சேர்ந்தவர் ரமேஷன், 64. இவரது மனைவி பத்மம், 56. இந்த தம்பதி தங்கள் வீட்டு தோட்டத்தில் மிளகு பயிரிட்டிருந்தனர். நேற்று அந்த மரத்தில் ஏறி கணவர் ரமேஷன் மிளகு பறித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மரக்கிளை முறிந்தது.
கீழே இருந்த, 40 அடி ஆழ கிணற்றில் ரமேஷன் தவறி விழுந்தார். அவருக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு இருந்ததால், கிணற்றுக்குள் சுயநினைவின்றி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பத்மம், தைரியமாக கிணற்றுக்குள் இறங்கினார். கையில் எடுத்து சென்ற கயிற்றின் உதவியுடன் கணவரை நீரில் மூழ்காமல் பிடித்துக் கொண்டார்.
கிணற்றுக்குள், 20 நிமிடங்கள் வரை தாங்கி பிடித்ததில், பத்மம் கையில் காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கணவன் - மனைவியை மீட்டனர். சமயோசிதமாகவும், தைரியமாகவும் செயல்பட்டு கணவரை காப்பாற்றிய மனைவி பத்மத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.