டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' டில்லியில் ஆந்திரா சுயம்வரம்!
டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' டில்லியில் ஆந்திரா சுயம்வரம்!
ADDED : பிப் 11, 2024 04:47 AM

ராஜாக்கள் ஆண்ட காலங்களில், தங்களுடைய மகளுக்கு திருமணம் நடத்த சுயம்வரம் நடத்துவர். இதில் பக்கத்து நாட்டு ராஜாக்கள் பங்கேற்க, தன் கணவரைத் தேர்ந்தெடுப்பார் இளவரசி; இதே போல, தற்போது டில்லியில் அரசியல் சுயம்வரம் நடைபெற்று வருகிறது.
பா.ஜ.,வின் கூட்டணியில் சேர, ஆந்திராவின் இரண்டு அரசியல் கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடுவும், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் எதிரிகள்; ஆனால், இருவருமே பா.ஜ., கூட்டணியில் சேர விரும்புகின்றனர். லோக்சபா தேர்தலோடு, ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே பா.ஜ., கூட்டணியில் இருந்தவர், சந்திரபாபு நாயுடு. 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கூட்டணியிலிருந்து விலகி, காங்., கூட்டணியில் சேர்ந்து படுதோல்வி அடைந்தார். இவர் அமித் ஷாவை சந்தித்த அடுத்த, 24 மணி நேரத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மோடியைச் சந்தித்தார். 'ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான சந்திப்பு' என, அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அரசியல் பேசப்பட்டது என்பது தான் உண்மை.
சந்திரபாபு நாயுடு தானாக கூட்டணியிலிருந்து விலகியவர் என்பதால், அவர் மீது பா.ஜ.,விற்கு மதிப்பு அதிகம் இல்லை. அதே சமயம், சமீபத்தில், 'எந்த ஒரு கட்சிக்கும் மத்தியில் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது' என்ற ஜெகனின் பேச்சு, பா.ஜ.,வை நோகடித்துள்ளது.
தவிர, ஆந்திராவில் பா.ஜ.,விற்கு பெரிதாக எதுவுமில்லை; இதனால் அதிக சீட்கள் கேட்கவும் முடியாது. நாயுடுவும், ரெட்டியும் அதிக சீட் தர தயாராக இல்லை.
இன்னொரு பிரச்னையும் உண்டு... -வெளிப்படையாக பா.ஜ.,வுடன் இணைந்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது; இதனால் மறைமுக ஒப்பந்தம் செய்ய இருவருமே தயாராக உள்ளனர். இதில் யாருடன் கூட்டணி சேர்வது என்பதை பா.ஜ., தலைமை அலசி ஆராய்ந்து வருகிறது.

