ADDED : பிப் 11, 2024 03:46 AM

ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்; இவருடைய பிஜு ஜனதா தளம் இங்கு ஆட்சியில் உள்ளது. 23 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிசாவின் முதல்வராக சாதனை புரிந்து வருகிறார். இங்கு, பா.ஜ., எதிர்க்கட்சி என்றாலும், மத்தியில் மோடி அரசை ஆதரித்து வருகிறார் பட்நாயக்.
ஒடிசா மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றவர் நவீன். லோக்சபா தேர்தலில் இவர் யாருடன் கூட்டணி அமைப்பார்? காங்கிரசை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி, பிஜு ஜனதா தளம். எனவே, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடியாது.
சமீபத்தில், ஒடிசாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, 'நவீன் என் நண்பர்' என கூறினார். மோடிக்கும், இவருக்கும் நல்ல நட்பு உள்ளது. ஒடிசாவிற்கு வேண்டிய திட்டங்களை, உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறார் மோடி.
'பட் நாயக் - -மோடி ஒன்று சேர்ந்து, ஒடிசாவில் உள்ள, 'நால்கோ' என்கிற நவரத்னா பொது நிறுவனத்தை தனியாருக்கு விற்று விடுவர்' என, ஒடிசாவில் பாதயாத்திரையின் போது கூறினார் ராகுல். பா.ஜ., - -பிஜு ஜனதா தளம் ஒன்று சேர்ந்தால், காங்கிரசுக்கு எதுவும் கிடைக்காது என்பது ராகுலுக்கு தெரியும்.
பட் நாயக்கின் ஆலோசகராக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன். 'எங்கள் மாநிலம் முன்னேற வேண்டும்; மத்திய அரசுடன் சுமுக நட்பே எங்கள் இலக்கு. நாங்கள் காங்கிரசுடனோ, பா.ஜ.,வுடனோ சண்டையிட இங்கு ஆட்சி நடத்தவில்லை' என, கூறி இருக்கிறார் பாண்டியன். 'பா.ஜ.,- - பிஜு ஜனதா தளம் இரண்டுமே மறைமுக ஒப்பந்தம் வாயிலாக, ஒடிசாவில் போட்டியிடும்' என, சொல்லப்படுகிறது. மேலும், பா.ஜ.,விற்கு இங்கு அதிக ஆதரவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

