ADDED : ஆக 31, 2011 11:42 PM
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில், தங்கிரிபாலா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில், டிரைவர் ஒருவர் பலியானார்.
ஒடிசா மாநிலம், கியோஞ்சர் - பன்ஸ்பானிக்கு இடையே உள்ள தங்கிரிபாலா ரயில்வே ஸ்டேஷன் அருகே, இரும்புத் தாதுவை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயில், எதிரே வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில், சரக்கு ரயிலின் டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த ரயில் விபத்து காரணமாக, புரி - பன்ஸ்பானி இடையே ஓடும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில், டிரைவர் உட்பட 5 பேர் சிக்கினர். இதில், டிரைவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற நான்கு பேர் யார் என்று தெரியவில்லை. இவர்களையும் மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. குர்டா பிரிவு மூத்த ரயில்வே அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்' என்றார்.