sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லோக்சபாவில் மோடி, ராகுல் நேரடியாக மோதல்

/

லோக்சபாவில் மோடி, ராகுல் நேரடியாக மோதல்

லோக்சபாவில் மோடி, ராகுல் நேரடியாக மோதல்

லோக்சபாவில் மோடி, ராகுல் நேரடியாக மோதல்

52


UPDATED : ஜூலை 01, 2024 11:55 PM

ADDED : ஜூலை 01, 2024 11:52 PM

Google News

UPDATED : ஜூலை 01, 2024 11:55 PM ADDED : ஜூலை 01, 2024 11:52 PM

52


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''தங்களை ஹிந்து என கூறிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை துாண்டி விடுகின்றனர்,'' என, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை அடுத்து பெரும் அமளி ஏற்பட்டது. ''ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என்பதா?'' என்று பிரதமர் மோடி சீற, மோடி -- ராகுல் இடையே நேரடி மோதல் வெடித்தது.

ஜனாதிபதி உரை மீதான நேற்றைய விவாதத்தை முடித்து வைக்கும் வாய்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுலுக்கு கிடைத்தது. ''அரசியல் சாசனம் வாழ்க,'' என்ற கோஷத்துடன் பேச்சை துவக்கினார்.

''எதிர்க்கட்சியினரை குறி வைத்து தாக்குவதை அரசு வழக்கமாக கொண்டிருக்கிறது. என் மீதே 20 வழக்குகள் போட்டுள்ளனர்.

''இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது, பதவி பறிக்கப்பட்டது, வீடு பறிக்கப்பட்டது, 55 மணி நேரம் விசாரணை நடத்தினர், அத்தனையும் தாண்டி இங்கே வந்திருக்கிறோம். அதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?''

இவ்வாறு கேட்ட ராகுல், சிவபெருமான் படத்தை உயர்த்திக் காட்டினார்.

சபாநாயகர் பிர்லா: சபையில் பதாகைகளை காட்ட விதிகள் அனுமதிக்கவில்லை.

ராகுல்: சிவபெருமான் படத்தை காட்டுவதற்கு கூட அனுமதியில்லையா? சிவன் கையிலிருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது அல்ல, அஹிம்சைக்கானது.

ஹிந்து மதம் அமைதியை மட்டுமே போதிக்கிறது. ஆனால், தங்களை ஹிந்து என எப்போதும் கூறிக்கொள்பவர்கள் வன்முறையையும், வெறுப்பையும் துாண்டிவிடுவதை முழுநேர வேலையாக செய்கின்றனர்.

பிரதமர் மோடி: ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் வன்முறையாளர்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது.

ராகுல்: நான் உங்களை பற்றி தான் பேசுகிறேன். உங்கள் கட்சியான பா.ஜ.,வை பற்றி பேசுகிறேன். ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசுகிறேன். உங்களை ஒட்டுமொத்த ஹிந்து சமூகமாக காட்டிக் கொள்ள தேவையில்லை.

அமைச்சர் அமித் ஷா: கோடானு கோடி மக்கள் தங்களை ஹிந்து என பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றனர். அவர்களை வன்முறையாளர்கள் என சொன்னதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவசரநிலை பிரகடனம் செய்தவர்கள், சீக்கீயர்களை கொன்று குவித்தவர்கள் கட்சிக்கு அஹிம்சை பற்றி பேச அருகதை கிடையாது.

ராகுல்: ஹிந்து மதம் மட்டுமல்ல; எல்லா மதங்களும் அஹிம்சையை தான் போதிக்கின்றன. வன்முறையை துாண்டும் நீங்கள் ஹிந்துக்களே அல்ல.

ராகுல் இவ்வாறு சொன்னதும் எதிர்க்கட்சிகள் வரிசையில் ஆரவாரமும், ஆளும் கட்சி வரிசையில் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. ராகுல் மீண்டும் பேச துவங்கியதும், மைக் 'ஆப்' ஆனது.

சபாநாயகரிடம் முறையிட்டு இணைப்பை கேட்டுப் பெற்று பேச்சை தொடர்ந்தார். ''அயோத்தியில் இருந்தே ஆரம்பிக்கிறேன்,'' என கூறிவிட்டு, அருகில் அமர்ந்திருந்த அயோத்தி நகரம் அடங்கிய பைசாபாத் தொகுதியின் சமாஜ்வாதி உறுப்பினருக்கு வணக்கம் கூறி, கைகுலுக்கினார். எதிர்க்கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ராகுல்: உங்கள் தவறுகளுக்காக அயோத்தி ராமரே பாடம் கற்பித்து விட்டார். ராமருக்கு கோவில் திறந்த நீங்கள், அந்த மண்ணின் மக்களைக்கூட அழைக்கவில்லை. அம்பானியும், அதானியும்தான் விருந்தினராக வந்தனர். நகரத்தை காட்சிப்படுத்த ஏழை மக்களின் நிலங்களை பறித்தனர். தொழில்களை தடுத்தனர். தடுக்க முடியாமல் தவித்த மக்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் உங்களை தண்டித்து விட்டனர். அதனால் தான் வாரணாசியில் மோடியே தப்பித்தோம், பிழைத்தோம் என்றுதான் வெற்றி பெற முடிந்தது. ஆனாலும், பகவானும் மக்களும் புகட்டிய பாடத்தை நீங்கள் கற்ருக் கொண்டதாக தெரியவில்லை.

காலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நான் வணக்கம் சொன்னபோது புன்னகையுடன் பதில் வணக்கம் சொன்னார். பிரதமருக்கு வணக்கம் சொன்னபோது முகத்தை, 'உர்' என வைத்துக் கொண்டார். என்னிடம் மோடி ஏன் எப்போதும் சீரியசாக இருக்கிறார் என தெரியவில்லை.

பிரதமர் மோடி: எதிர்க்கட்சி தலைவரை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அரசியல் சாசனமே சொல்கிறது. அதை பின்பற்றுகிறேன்.

மோடி சீரியசாக சொல்கிறாரா கிண்டலா என்பது தெரியாததால் இரு தரப்பிலும் சத்தமே எழவில்லை. ஆனால் சபாநாயகர் தலையிட்டார்.

சபாநாயகர்: ஜனாதிபதி உரை மீது பேச சொன்னால் ராமர் பற்றி பேசுகிறீர்களே...

ராகுல்: அமைச்சர் அனுராக் தாக்கூர் மட்டும் அயோத்தி பற்றி பேச அனுமதித்தீர்கள் தானே...

இதையடுத்து ராகுல், ராணுவம் பக்கம் பேச்சை திருப்பினார்.

ராகுல்: அக்னி வீர் திட்டத்தில் தேர்வானவர்களை, ராணுவ வீரர்கள் என கூறமுடியாத நிலை உள்ளது. ஆறு மாதங்கள் பயிற்சி தந்து அவர்களை பயன்படுத்திவிட்டு துாக்கி எறிகிறீர்கள். அவர்கள் உயிரிழந்தால் ஓய்வூதியம் கிடைக்காது. உதவியும் கிடையாது.

அமைச்சர் ராஜ்நாத் சிங்: எதிர்க்கட்சி தலைவர் பொய் தகவல் சொல்கிறார். அக்னி வீர் திட்டத்தில் தேர்வான வீரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் தரப்படும்.

ராகுல்: வெறுப்பு பேச்சாலும், பிரசாரத்தாலும் மணிப்பூரில் உள்நாட்டு போரை ஏற்படுத்தினீர்கள். இத்தனை காலமாக இவ்வளவு வன்முறை, உயிரிழப்புகள் நிகழ்ந்தும் பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை. அது இந்தியாவுக்குள் இல்லையா. அவர்கள் நம் மக்கள் இல்லையா. மணிப்பூர் மக்களை தன் மக்களாக பிரதமர் கருதவில்லையா? கருத வாய்ப்பு இல்லை தான். ஏனென்றால், நமது பிரதமர் உயிரியல் ரீதியாக பிறக்காதவர். கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர். அதிரடியாக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் கடவுளிடம் இருந்து நேராக வந்த கட்டளைகளாக இருக்கலாம். அப்படி ஒரு கட்டளை வந்து தான் இரவு எட்டு மணிக்கு பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார் போலும்.

சபாநாயகர்: பிரதமர் மரியாதைக்கு உரியவர். அவருக்கு மரியாதை கொடுங்கள், ராகுல்.

ராகுல்: நிச்சயமாக மரியாதை அளிக்கிறேன், சார். ஆனால், இப்போது நான் சொன்னது நானாக சொல்லவில்லை. 'இயற்கை முறையில் பிறக்கவில்லை, இறைவனால் அனுப்பப்பட்டவன்' என, நான் கூறவில்லை. பிரதமர் தான் கூறினார். அதை நான் ஞாபக படுத்தினேன், அவ்வளவு தான். மும்பை விமான நிலையத்தை அதானிக்கும், மும்பை துறைமுகத்தை அம்பானிக்கும் தர வேண்டும் என்று பிரதமருக்கு கடவுள் தான் கட்டளையிட்டு இருக்க வேண்டும்.

நீட் தேர்வை வணிக தேர்வாக மாற்றிவிட்டீர்கள். பணம் இல்லையென்றால் அதிக மதிப்பெண் பெற முடியாது. இந்த தேர்வால் பணக்கார மாணவர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர். ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. மாணவர்களுக்கு நம்பிக்கை தர, இது குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்.

சபாநாயகர்: ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் வேறு விஷயம் விவாதிக்க வழியில்லை.

ராகுல்: அப்படி என்றால் இந்த விவாதம் முடிந்த பின்னர் ஒரு நாள் அதற்காக ஒதுக்கித்தர உறுதி தாருங்கள்.

சபாநாயகர்: உங்கள் பேச்சை முடியுங்கள். நிறைய நேரம் எடுத்துக் கொண்டீர்கள்.

ராகுல்: இந்த சபையின் நடுவர் சபாநாயகர். அவர் கூறுவது தான் இறுதி வார்த்தை. அவர் கூறுவது தான் நம் ஜனநாயகத்தின் அடிப்படையை வரையறுக்கிறது. ஆனால், அந்த இருக்கையில் இரண்டு பேர் அமர்ந்துள்ளதாக தெரிகிறது. ஒருவர் சபாநாயகர். மற்றொருவர் ஓம் பிர்லா.

நீங்கள் பொறுப்பேற்றவுடன் வாழ்த்த வந்தேன். நிமிர்ந்து நின்றபடி என்னுடன் கைகுலுக்கினீர்கள். ஆனால் மோடி கைகுலுக்கும் போது உடலை வளைத்து வணங்கி நின்றீர்கள். அது சரியா?

இதை கேட்டதும் சபையில் அதிர்ச்சி தெரிந்தது. அமித் ஷா ஆவேசமானார்.

அமித் ஷா: சபாநாயகர் மீதே குற்றச்சாட்டு வைப்பதா..?

சபாநாயகர்: நம்மைவிட வயதில் மூத்தவர்களை வணங்கவும், முடிந்தால் பாதம் தொட்டு மரியாதை செலுத்தவும் பயிற்றுவிக்கப்பட்டவன் நான்.

ராகுல்: சபாநாயகரை விட பெரியவர் இந்த சபையில் யாருமில்லை. அவர் யாருக்கும் தலை வணங்க கூடாது என்பது என் நிலைப்பாடு. உங்கள் எண்ணத்தை நான் மதிக்கிறேன். அதற்காக உங்களை வணங்குகிறேன். அரசுடன் ஒத்துழைக்க எதிர்க்கட்சியினர் தயாராக உள்ளோம். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ராகுல் பேசினார். அவரது பேச்சில் இடம் பெற்ற ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்து, பிரதமர் மோடி இன்று மாலை, 4:00 மணிக்கு உரையாற்றுகிறார்.

அமைச்சர்கள் குறுக்கீடு

ராகுல் பேசும்போது சபை கொந்தளிப்புடனேயே காணப்பட்டது. பிரதமர் இருமுறை குறுக்கிட்டுப் பேசினார். உள்துறை அமைச்சர் நான்கு முறை குறுக்கிட்டார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத், பார்லிமென்ட் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபீந்தர் சிங் யாதவ் ஆகியோரும் குறுக்கிட்டனர்.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us