மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியாவிடம் சீனா வலியுறுத்தல்
மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியாவிடம் சீனா வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2024 04:35 AM

புதுடில்லி: இந்தியா, சீனா இடையே, நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் ஜி - 20 உச்சி மாநாட்டுக்கு இடையே இருவரும் சந்தித்ததாக, சீன வெளியுறவுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள நேரடி விமான சேவையை துவங்குமாறு, அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர் பரிமாற்றங்களுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தவும்; விசா நடைமுறைகளை எளிதாக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
எல்லை பிரச்னையால், இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ராணுவ படை விலக்கல் நடவடிக்கைகள் காரணமாக, உறவில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.