ADDED : ஜன 23, 2024 05:44 AM
பெங்களூரு: ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் பதவிக் காலம், ஜனவரி 31ல் முடிவடைகிறது.
பெங்களூரின், பிரபலமான ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனராக பணியாற்றுபவர் மஞ்சுநாத். மருத்துவ துறையில், இவரது சிறப்பான செயல் திறன் மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே இவரது பதவிக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
முந்தைய பா.ஜ., அரசு காலத்தில், மஞ்சுநாத்தின் பதவிக் காலத்தை, ஒன்றரை ஆண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. நடப்பு ஜனவரி 31ல், இவரது பதவிக் காலம் முடிவடைகிறது.
புதிய இயக்குனரை தேர்ந்தெடுக்க ஆலோசிக்கும் சித்தராமையா அரசு, விண்ணப்பம் தாக்கல் செய்யும்படி பத்திரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பம் தாக்கல் செய்யும் காலமும் முடிந்துள்ளது.
புதிய இயக்குனராக, மைசூரு ஜெயதேவா மருத்துவமனை இயக்குனர் தினேஷ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயதேவா இதய நோய் மருத்துவமனையில், பல மாற்றங்களை கொண்டு வந்தவர் இயக்குனர் மஞ்சுநாத். 'ட்ரீட்மென்ட் பர்ஸ்ட், பேமென்ட் நெக்ஸ்ட்' என்ற கொள்கையுடன் செயல்படுகிறார்.
ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர். இவரது பதவி காலம் முடிவதால், மருத்துவமனை ஊழியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

