வாழ்க்கையில் சாதிக்க ஒழுக்கமும் பயிற்சியும் முக்கியம் என்.சி.சி., மாணவர்களுக்கு முதல்வர் ஆதிஷி அறிவுரை
வாழ்க்கையில் சாதிக்க ஒழுக்கமும் பயிற்சியும் முக்கியம் என்.சி.சி., மாணவர்களுக்கு முதல்வர் ஆதிஷி அறிவுரை
ADDED : ஜன 16, 2025 09:32 PM

கன்டோன்மெண்ட்:“வாழ்க்கையில் எதையும் சாதிக்க இந்த ஒழுக்கமும் பயிற்சியும் மிக முக்கியம்,” என, என்.சி.சி., மாணவர்களுக்கு முதல்வர் ஆதிஷி அறிவுரை வழங்கினார்.
நாட்டின் 17வது தேசிய என்.சி.சி., இயக்குனரகத்தின் பல்வேறு பகுதிகளை டில்லி முதல்வர் ஆதிஷி நேற்று முன் தினம் பார்வையிட்டார். போர்க்கப்பல்கள், விமானங்களின் மாதிரிகளை பார்வையிட்ட அவருக்கு, அவற்றின் செயல்பாடுகள் விளக்கப்பட்டன.
முகாமில் என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. தேசத்திற்காக தன் உயிரைக் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதிஷி அஞ்சலி செலுத்தினார்.
காரிப்பா பரேட் மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்புக்கு தயாராகி வரும் என்.சி.சி., மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை முதல்வர் ஊக்குவித்தார்.
குடியரசு தினத்தைப் பற்றி முதல்வர் ஆதிஷி பேசியதாவது:
ஜனவரி 26 அன்று நாம் குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம். அதன் முக்கியத்துவத்தைப் பற்றி நான் அடிக்கடி சிந்திக்கிறேன். இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் எண்ணற்ற தனிநபர்களின் தியாகங்கள் மூலம் கடினமாகப் பெறப்பட்டவை.
கடந்த 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்தது.
என்.சி.சி., மாணவர்களின் ஒழுக்கமும் தேச பக்தியும் பாராட்டத்தக்கது. அவர்களின் அர்ப்பணிப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தங்கள் புதுமையான யோசனைகள், உற்சாகம், ஆற்றலுடன், நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறனை நம் இளைஞர்கள் கொண்டுள்ளனர்.
நம் நாடு ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியையும், ஏழைகளுக்கு சிறந்த சுகாதாரத்தையும், பெண்களுக்கு பாதுகாப்பையும் வழங்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், நம் இளைஞர்களிடம் உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் முடிவற்ற கவனச்சிதறல்கள் நிறைந்த இந்தக் காலத்தில், குளிர் காலநிலையையும் பொருட்படுத்தாமல் என்.சி.சி., மாணவர்கள் குடியரசு தின முகாமில் பங்கேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க்கையில் எதையும் சாதிக்க இந்த ஒழுக்கமும் பயிற்சியும் மிக முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.