மெட்ரோ திட்டத்துக்கு நிலம் அரசு தயக்கத்தால் அதிருப்தி
மெட்ரோ திட்டத்துக்கு நிலம் அரசு தயக்கத்தால் அதிருப்தி
ADDED : அக் 27, 2024 11:10 PM
பெங்களூரு: நம்ம மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்துக்கு, கே.ஐ.ஏ.டி.பி., வசத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் அளிக்கும்படி, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் கோரியுள்ளது. இந்த இடத்தை வழங்க, அரசு தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரின் புறநகர் பகுதிகளுக்கும், மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மூன்றாம் கட்ட திட்டத்தை செயல்படுத்த தயாராகிறது. இதற்கு 45 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது குறித்து, அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தனியார் தொழிற்சாலை துவக்க ஹெப்பாலில் 45 ஏக்கர் நிலத்தை, கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்தியது. இங்கு எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை. எனவே இந்த இடத்தை தனக்கு கைமாற்ற வேண்டும். இதற்காக ஏக்கருக்கு 12.10 கோடி ரூபாய் விலை கொடுப்பதாக பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது.
இது தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார், கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மெட்ரோ நிறுவனம், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி, நிலம் பெறும்படி உத்தரவிடப்பட்டது. அரசிடம் தேவையான நிலம் இருந்தும், அதை மெட்ரோ திட்டத்துக்கு அளிப்பதற்கு பதில், நிலம் பெறும் பொறுப்பை மெட்ரோ நிறுவனத்தின் தலையில் சுமத்தியது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
தனியார் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைக்க, அரசு உதவ முற்படுவதாக, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.