அங்கீகாரம் அளிக்காத பொறுப்புக்குழு கலைப்பு கர்நாடக தி.மு.க., அமைப்பாளர் எச்சரிக்கை
அங்கீகாரம் அளிக்காத பொறுப்புக்குழு கலைப்பு கர்நாடக தி.மு.க., அமைப்பாளர் எச்சரிக்கை
ADDED : ஜன 29, 2024 07:23 AM

தங்கவயல்: ''தங்கவயல் தி.மு.க., வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு கட்சி மேலிடம் அங்கீகாரம் அளிக்கவில்லை. இவர்கள் ஒழுங்காக செயல்படாவிட்டால் அந்த குழு கலைக்கப்படும்,'' என மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி எச்சரித்தார்.
ராபர்ட்சன்பேட்டை நான்காவது பிளாக் பகுதியில், தங்கவயல் தி.மு.க.,வின் வளர்ச்சி பணிகள் குறித்து, கலந்துரையாடல் கூட்டம் ஆனந்தராஜ், சாரங்க பாணி, பெருமாள், கன்னையன், பூபாலன், நாராயணமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் நேற்று நடந்தது.
கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி பேசியதாவது:
தி.மு.க., வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பணமே ஆதாரமாக உள்ளது. இது போன்று பல காரணங்கள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தங்கவயல் தி.மு.க., வளர்ச்சிக்கு 7 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கட்சி தலைமையோ, கோலார் என்றைக்குமே கோளாறு என்று கூறி, பொறுப்புக்குழுவுக்கு அங்கீகாரம் தரவில்லை.
இப்படிப்பட்ட குழுவில், இரு கோஷ்டியாக இருப்பது சரியல்ல. இது குறித்து அவர்களிடம் பேசுவேன். ஒத்துப்போகாவிட்டால், பொறுப்புக்குழுவை கலைப்பதை தவிர வேறு வழியில்லை.
தங்கவயலில் பொது பிரச்னைகளை தீர்ப்பதில் தி.மு.க., கவனம் செலுத்த வேண்டும். கடமையாகும். தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கு இறுதி செட்டில்மென்ட் கிடைக்கவில்லை.
தங்கச் சுரங்க குடியிருப்புகளில் வசித்து வருவோருக்கு சதுர அடி 10 ரூபாய்க்கு வழங்க உத்தரவு உள்ளது. இதனை மத்திய அரசு அமல் படுத்த வேண்டும். இதற்காக அரசியல், மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அருணாசலம், வக்கீல் மணிவண்ணன், சாரங்க பாணி, சூரியா ஆகியோர் பேசினர்.