1,000 நில அளவையாளர்களுக்கு உரிம சான்றிதழ் வினியோகம்
1,000 நில அளவையாளர்களுக்கு உரிம சான்றிதழ் வினியோகம்
ADDED : மார் 14, 2024 04:14 AM

பெங்களூரு, : புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,000 நில அளவையாளர்களுக்கு, உரிம சான்றிதழ்களையும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளையும், வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா வழங்கினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நில அளவையாளர்களுக்கு உரிமச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருவாய் துறை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியை, அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா துவக்கி வைத்து பேசியதாவது:
ஒவ்வொரு வீட்டிலும் வருவாய் துறைக்கு வேலை இருக்கிறது. கணக்கு, அனுமதி, ஜாதி சான்றிதழ் உட்பட அனைத்து நிலைகளிலும் மக்கள் வருவாய் துறையையே நம்பி உள்ளனர். அனைத்துத் துறைகளின் தாய் துறை, வருவாய் துறையாகும்.
மக்களுக்கு சேவை செய்யும்போது, ஊழியர்களுக்கும் தாய் உள்ளம் இருக்க வேண்டும். இத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்தி உள்ளோம். இருப்பினும், எங்களிடம் மட்டுமே அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு கோடி புதிய சர்வே எண்கள் நிலுவையில் உள்ளன. லட்சக்கணக்கானோருக்கு நிலம் ஒதுக்கப்பட்டும், இன்னும் நிலம் வழங்கப்படவில்லை. இன்னும் பல வேலைகள் உள்ளன.
முதல்வர் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியின்போது, அதிக புகார்கள் வந்தன. 700 கி.மீ., தொலைவில் இருந்து மக்கள் புகார்களுடன் வருகின்றனர். மக்களுக்கான நிரந்தர திட்டம் வேண்டும். திட்டத்தின் வெற்றிக்கு மனித வளம் தேவை.
தேவையான பணியாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். திட்டமிடல் பணியாளர்களுடன் இணைந்து, 21ம் நுாற்றாண்டில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே இலக்கை எட்ட முடியும். அப்போது தான் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

