அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்; தலைமை அர்ச்சகர் வேதனை
அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்; தலைமை அர்ச்சகர் வேதனை
ADDED : செப் 21, 2024 03:51 PM

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் திருப்பதி லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதாக அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறினார்.
உலகளவில் பிரசத்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில், கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்படுகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதனை ஜெகன்மோகன் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இது குறித்து மத்திய அரசு அறிக்கை கோரி உள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது: கடந்த ஜன.,22ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் திருப்பதி லட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. எத்தனை லட்டு வந்தது என்பது குறித்து அறக்கட்டளைக்கு தான் தெரியும். எனக்கு தெரியாது. ஆனால், வந்தவை அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது வெளியாகி உள்ள தகவல் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒரு லட்சம் லட்டு பிரசாதங்களை அயோத்திக்கு திருப்பதி தேவஸ்தானம் அளித்து இருந்தது.
அறக்கட்டளை பொதுச்செயலாளர் கோபால் ராய் கூறியதாவது: திருப்பதி லட்டு விவகாரத்தில் மத்திய அரசின் விசாரணையை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். கும்பாபிஷேகம் அன்று ஏலக்காய் விதைகளை தான் பக்தர்களுக்கு விநியோகித்தோம். நான் திருப்பதிக்கு 1981 ல் ஒரு முறை மட்டுமே சென்றுள்ளேன். இந்த சர்ச்சை குறித்து தற்போது கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
ஹனுமன் கோவிலில்
அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கார்கி கோயில் நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் 'பிராண்டட்' நிறுவனங்களின் நெய்யை மட்டும் தான் பயன்படுத்துகிறோம். கோயில் நிலத்தில் வாடகைக்கு உள்ள கடைக்காரர்களும் அந்த நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரிக்கின்றனர். அவ்வபோது, நெய்யின் தரம் குறித்த பரிசோதனை செய்யப்படும். அதில் ஏதாவது பிரச்னை உள்ளது என பக்தர்கள் புகார் தெரிவித்தால், அந்த கடை மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.